செய்திகள்
பாராளுமன்ற கட்டிடம் தீ வைத்து எரிப்பு

கல்வி, சுகாதாரத்திற்கான நிதி குறைப்பு - பாராளுமன்ற கட்டிடத்தை தீயிட்டு கொளுத்திய போராட்டகாரர்கள்

Published On 2020-11-22 12:59 GMT   |   Update On 2020-11-22 12:59 GMT
பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு செலவுக்கு ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யும் வகையிலான பட்ஜெட் தொகைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கவுதமாலா சிட்டி:

மத்திய அமெரிக்க நாடுகளில் கவுதமாலாவும் ஒன்று. அந்நாட்டின் அதிபராக அலிஜான்ட்ரோ ஜியாம்மாட்டி. கொரோனா வைரஸ், புயல், கனமழை என பல்வேறு பேரிடர்களால் கவுதமாலா பெரும் இன்னலை சந்தித்து வருகிறது. அந்நாட்டில் ஊழல் பெரும் பிரச்சனையாக நிலவி வருகிறது.

இதற்கிடையில், 2021-ம் ஆண்டுக்கான நாட்டின் பட்ஜெட் தொகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு செலவுக்காக மட்டும் 50 லட்சம் ரூபாய் (65 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) ஒதுக்கீடு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். 

அதேவேளை நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையும் மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.      

இதையடுத்து, அதிபர் அலிஜான்ட்ரோ ஜியாம்மாட்டி, துணை அதிபர் காஷ்டிலோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து கவுதமாலாவில் போராட்டங்கள் வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் நாட்டின் முக்கிய பகுதிகளில் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் கவுத்தமாலா சிட்டியில் அமைந்துள்ள நாட்டின் பாராளுமன்றம் கட்டிடத்தின் முன் இன்று ஆயிரக்கணக்கான போராட்டகாரர்கள் திரண்டனர். 

சுகாதாரம், கல்விக்கு பட்ஜெட் தொகையை குறைத்ததை கண்டித்து அதிபர், துணைஅதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், பாராளுமன்ற 
கட்டிடத்திற்குள் அதிரடியாக நுழைந்த போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை தீவைத்து கொளுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் துணை அதிபர் காஷ்டிலோ தான் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆனால், அதிபர் ஜியாம்மாட்டி ராஜினாமா செய்வது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
Tags:    

Similar News