செய்திகள்
மானசா-ராகில்

பெண் மருத்துவரை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை செய்தது ஏன்?- விசாரணையில் பரபரப்பு தகவல்

Published On 2021-07-31 10:12 GMT   |   Update On 2021-07-31 10:12 GMT
கேரளாவில் பெண் மருத்துவரை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த தம்பதி மாதவன்-சவிதா. இவர்களது மகள் மானசா (வயது 24). இவர் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் நெல்லுக்குழியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்தார். பின்பு அந்த கல்லூரி அருகே உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார்.

அங்கு மாணவிகள் சிலருடன் தங்கியிருந்து பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் அவர்களுடன் அமர்ந்து மானசா சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த வாலிபர் ஒருவர், மானசாவை ஒரு அறைக்குள் தூக்கி சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.

சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடன் தங்கியிருந்த மாணவிகள் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது மானசாவும், அந்த வாலிபரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அந்த வாலிபர், மானசாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோதமலங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மானசாவை சுட்டுக் கொன்ற வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர் கண்ணூர் மேலூர் பகுதியை சேர்ந்த ராகில் (32) என்பது தெரிய வந்தது. எம்.பி.ஏ. படித்துள்ள அவர், மானசா தங்கியிருந்த பகுதியில் வசித்து வந்துள்ளார். இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி பழகி வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ராகில் பிரச்சனை செய்ததால் அவர் மீது போலீசில் மானசா புகார் செய்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், பிரச்சனை செய்ய மாட்டேன் என்று ராகிலிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி விட்டனர். இந்நிலையில்தான் அவர் மானசாவை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.

தன்னிடம் பழகியதை நிறுத்தியதாலும், போலீசில் புகார் செய்ததாலும் மானசாவை அவர் கொன்றிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆகவே இருவரது செல்போன்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது உரையாடல்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வாலிபர் ராகிலுக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் எளிதாக துப்பாக்கி கிடைப்பதாக கேரளாவில் குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது. ஆகவே அவர் ஆன்லைனில் துப்பாக்கி வாங்கினாரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மானசாவின் தாய் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவரது தந்தை ரப்பர் பால்வெட்டுபவர். தங்களின் மகள் கொல்லப்பட்டதை டி.வி.யில் ஒளிபரப்பான செய்தியை பார்த்தே அவர்கள் அறிந்து கொண்டனர். அவர்கள் உடனடியாக எர்ணாகுளத்திற்கு விரைந்தனர்.

துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட மானசா மற்றும் தற்கொலை செய்து கொண்ட ராகிலின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News