செய்திகள்
நீரா டாண்டன்

இந்திய பெண் நீரா டாண்டன் நியமனத்தை வாபஸ் பெற்றார் ஜோ பைடன்

Published On 2021-03-03 19:22 GMT   |   Update On 2021-03-03 19:22 GMT
ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து முக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து முக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறார்.

அந்த வகையில் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் என்பவரை நியமிப்பதாக ஜோ பைடன் அறிவித்தார். ஆனால் ஜோ பைடன் இந்த பரிந்துரையை கூறியவுடன் பலரும் நீரா டாண்டனுக்கு எதிராக திரண்டனர். ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட் சபை எம்.பி. ஜோ மான்சின், செனட் சபையில் நீரா டாண்டன் நியமனத்தை எதிர்த்து வாக்களிக்க போவதாக தெரிவித்தார். இதே போல் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சூசன் கொலின்ஸ், மிட் ரூம்னி, ராப் போர்ட்மேன் ஆகிய செனட் சபை எம்.பி.க்களும் அவருக்கு எதிராக வாக்களிப்போம் என கூறினர்.

ஆனால் வெள்ளை மாளிகையோ, பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குநர் பதவிக்கு பொருத்தமான மற்றும் தகுதியான ஒரே நபர் நீரா டாண்டன் மட்டுமே என கூறி வந்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக நீரா டாண்டனின் நியமனத்தை வாபஸ் பெறுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். நீரா டாண்டனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.‌

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை இயக்குநருக்கான வேட்புமனுவிலிருந்து தனது பெயரைத் திரும்பப் பெறக்கோரிய நீரா டாண்டனின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன்’’ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News