செய்திகள்
கைது செய்யப்பட்ட மனோகரன்

சீர்காழியில் பெரியார் சிலையை அவமதித்த விவசாயி கைது

Published On 2021-03-08 16:13 GMT   |   Update On 2021-03-08 16:13 GMT
சீர்காழியில் பெரியார் சிலையை அவமதித்த விவசாயியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி போலீஸ் நிலையம் எதிரில் பெரியார் சிலை உள்ளது. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி மாலை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விபூதி மற்றும் குங்குமம் வைத்து அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட கட்சியினர் பெரியாரை அவமதிப்பு செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு யுவப்பிரியா, சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரியார் சிலையை சுத்தப்படுத்தி மாலை அணிவித்தனர். மேலும் பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சீர்காழி அருகே பழையபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொடக்காரமூளை கிராமத்தை சேர்ந்த விவசாயி மனோகரன் (வயது52) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், அரசு பட்டா பெற தன்னை அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்ததாகவும் இதனால் மனமுடைந்து , பெரியாரை கடவுளாக நினைத்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து விபூதி மற்றும் குங்குமம் வைத்தேன் என கூறினார்.

இதையடுத்து சீர்காழி போலீசார் மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News