செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை

Published On 2021-07-02 10:51 GMT   |   Update On 2021-07-02 10:51 GMT
எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியதாக சசிகலா பேசிய தொலைபேசி உரையாடல் அதிமுக மூத்த நிர்வாகிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அடைந்து வெளியே வந்துள்ள சசிகலா தேர்தல் சமயத்தில் அரசியலில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்தார்.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெரும்பாலான இடங்களில் தோல்வி அடைந்ததால் ஆட்சியை இழந்தது. இதனால் அரசியலில் ஒதுங்கி இருந்த சசிகலா மீண்டும் அரசியல் பிரவேசம் செய்துள்ளார்.

அ.தி.மு.க. நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி வருகிறார். நேற்று தூத்துக்குடியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ராமசாமியிடம் பேசும்போது எம்.ஜி.ஆருக்கே நான் ஆலோசனை சொன்னேன் என்று கூறினார்.

எம்.ஜி.ஆரோடு சேர்ந்து பயணித்துள்ளேன். கட்சி விசயமாக எம்.ஜிஆர். என்னிடம் நிறைய விசயங்களை கேட்டுள்ளார். நானும் ஆலோசனைகளை சொல்லி உள்ளேன். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பேன். எனது கருத்தை பொறுமையாக கேட்பார். அப்படித்தான் அவரிடம் இருந்து பழகி கொண்டேன் என்று கூறினார்.

சசிகலாவின் இந்த பேச்சு அ.தி.மு.க.வினரிடையே பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவுக்குதான் சசிகலா தோழியாக இருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் அரசியலில் இருந்தாரா? என்று கட்சிக்காரர்கள் மத்தியில் இந்த பேச்சு விவாதப்பொருளாகி விட்டது. ஒவ்வொரு நிர்வாகிகளும் இது தொடர்பாகவே பேசி வருகின்றனர்.

எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியதாக சசிகலா பேசிய தொலைபேசி உரையாடல் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

எம்.ஜி.ஆர். காலத்தில் அவரது அமைச்சரவையில் அப்போது இடம் பெற்றிருந்தவர்களிடம் முக்கியமானவர் சி.பொன்னையன். அ.தி.மு.க. அமைப்புச்செயலாளராக உள்ள சி.பொன்னையன் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் 1977 முதல் 1987 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் நெடுஞ்சாலைத்துறை, தொழில்துறை, சட்டத்துறை, கல்வி அமைச்சராகவும் பணியாற்றியவர்.

பொன்னையனுக்கு எம்.ஜி.ஆர். காலத்து அரசியல் முழுமையாக தெரியும் என்பதால் அவரை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் அடையாரில் உள்ள தனது வீட்டுக்கு வரவழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர். எம்.ஜி.ஆர். பற்றி சசிகலா தொலைபேசி உரையாடலில் கூறும் செய்திகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது.

இதுபற்றி கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் எம்.ஜிஆர். காலத்தில் சசிகலா சாதாரண வீடியோ கடைதான் நடத்தினார். அப்போது அவர் அரசியலில் கிடையாது.

தி.மு.க. தலைவர் கருணாநிதிதான் சசிகலா நடராஜன் திருமணத்தையே நடத்தி வைத்தவர்.

எம்.ஜி.ஆர். காலத்தில் சசிகலா குடும்பம் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தது. சசிகலாவின் பேச்சு இப்போது 1½ கோடி தொண்டர்களையும் கொதிப்படைய செய்துள்ளது என்றார்.
Tags:    

Similar News