செய்திகள்
நொய்யல் ஆறு

முத்தூர் நொய்யல் ஆற்றில் புதிய மேம்பாலம் அமைக்கப்படுமா?

Published On 2021-06-07 07:55 GMT   |   Update On 2021-06-07 07:55 GMT
முத்தூர் அருகே ரங்கசாமி கோவில் பஸ் நிறுத்தம் அருகில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் முத்தூர்-கொடுமுடி சாலை ரங்கசாமி கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டம் சிவகிரி செல்வதற்கு மாவட்ட எல்லையான நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு தாழ்வான தரைப்பாலம் கட்டப்பட்டு மண் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நொய்யல் ஆற்று மண் சாலையின் வழியாக முத்தூர், சாலியங்காட்டுப்பள்ளம், கொளந்தபாளையம், கரூர் மாவட்டம் அஞ்சூர் ஊராட்சி, பாண்டிலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார், லாரி, டெம்போ, வேன், சரக்கு ஆட்டோ உட்பட பல்வேறு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும் இந்த தாழ்வான மண் சாலை தரைப்பாலத்தை கடந்து ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோரும் சென்று வந்தனர். இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள மண் சாலை தரைப்பாலம் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது வரை தாழ்வான நிலையிலேயே இருந்து வருகிறது.
 
மேலும் இந்த ஆற்று தரைப்பாலத்தின் இருபுறமும் போதிய பாதுகாப்பு தடுப்புச்சுவர்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. மேலும் இந்த நொய்யல் ஆற்று தரைப்பாலம் போதிய உயரம் இன்றி தாழ்வாகவே காணப்படுகிறது.

மழைக்காலங்கள் மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பாய்ந்தோடும் மழைநீர் பாலத்தை மூழ்கடித்து சுமார் 20 அடிக்கும் மேலே உயர்ந்து சீறிப்பாய்ந்து செல்லும். 

அப்போது ரங்கசாமி கோவிலில் இருந்து ஈரோடு மாவட்டம் பொரசப்பாளையம், ராமநாதபுரம், சொரியம்பாளையம், வாழைத்தோட்டம், பாறைவலசு, நம்பகவுண்டன்பாளையம், சிலுவம்பாளையம், வள்ளியம்பாளையம், பூலாவலசு, சிவகிரி ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கு இந்த தரைப்பாலத்தில் சீரான இருசக்கர, கனரக வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும்.

மேலும் இந்த மண் சாலையிலான தரைப்பாலம் போதிய அகலமின்றி இருப்பதால் இவ்வழியே கனரக வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது ஒதுங்க வழியின்றி உயரமான தடுப்புச் சுவர் இல்லாததால் நொய்யல் ஆற்றில் கவிழ்ந்து விடும் அபாயத்துடனும், விபத்து ஏற்பட்டு விடும் அபாய அச்ச உணர்வுடனும் சென்று வருகின்றன.

எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே தாழ்வான மண்சாலை தரைப்பாலத்தை இடித்து அகற்றி விட்டு இருபுறமும் புதிய தடுப்பு சுவருடன் கூடிய புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டி சீரான வாகன போக்குவரத்து நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News