தோஷ பரிகாரங்கள்
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு செய்யும் அபிஷேகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு செய்யும் அபிஷேக பலன்கள்

Published On 2022-01-01 08:20 GMT   |   Update On 2022-01-01 08:20 GMT
நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணெயால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.
1. வடைமாலை பலன்:

சூரியனை ராகுவும், சந்திரனை கேதுவும் பிடிக்கும் நிகழ்ச்சியே கிரகணம் எனப்படுகிறது. அப்பேர்ப்பட்ட சூரிய பகவானை, ஸ்ரீ அனுமான் பிறந்தவுடன் பழம் என்று நினைத்து சூரியனை பிடித்துக் கொள்கிறார். அதைக்கண்ட ராகு பகவான் அனுமானிடம் போர் செய்து தோல்வியைக் கண்டார். அப்போர் நிகழ்ச்சியை இந்திரனிடம் ராகு பகவான் முறையிட இந்திரனுக்கும், அனுமானுக்கும் போர் ஏற்படுகிறது. அப்போரில் இந்திரனின் வஜ்ராயுதம் மாகப்பட்டது அனுமானின் தாடையில் அடிபட்டு வீங்கி விடுகிறது. தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ராகு பகவான் தனக்கு ஏற்பட்டதோல்வி காரணமாக உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் (பாம்பின் உடம்புபோல்) மாலையாக (வடை மாலையாக) உனக்கு சமர்பணம் செய்வோருக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகி நல்வாழ்வு பெற உதவுகிறோம் என்று ராகு அனுமானிடம் கூறுகிறார்.  ஆதலால் தாமும் ஸ்ரீ அனுமாருக்கு வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோசத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.

2. நல்லெண்ணை அபிஷேக பலன்:

இந்து மதத்தின் தர்ம சாஸ்திரப்படி ஒருவன் இயற்கை எய்தினால் அவர் திருமாலின் திருவடி (மோட்சம்) அடைவதே சாஸ்திரமாகும். திருமால் தன்னுடைய வியர்வை துளிகளை எடுத்து தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்று எள் தானியமாக விளைகிறது. எம்பெருமான் சரீரத்தில் கருநீல நிறம் போன்று உள்ள சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார். நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணெயால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.

3. பஞ்சாமிர்தம் அபிஷேக பலன்:

மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப் பாகப்பட்ட உயிர்நிலை ஆகிய இடங்களில் இருந்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது. இவை அனைத்தும் நன்றாக வாழ்நாள் முழுவதும் செவ்வனே இயங்க வேண்டி இறைவனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்கிறோம். ‘பழம், மனோரத பலம்‘ என்று சாஸ்திரம் கூறுவதை எண்ணி காரியங்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.

4. சீயக்காய் அபிஷேக பலன்:

சீயக்காய் அபிஷேகத் தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.

5. பால் அபிஷேக பலன்:

வேதம் கற்றரிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை. இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும்,தாய்மார்களுக்கு தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், தேசங்களிலும், வீடுகளிலும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் வற்றாத ஊற்று வரவும், யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழிப்பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.

6. தயிர் அபிஷேக பலன்:

வீடு, மனைவி, மக்கள், வாகனம், நிலம், இவை அனைத்தும் நம்மை படைக்கும் பொழுது நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் கடனாகவே படைக்கப்படுகிறோம். நாம் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டி இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.

7. நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேக பலன்:

பெண்டிர்கள், சுமங் கலித்துவம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்களை தவிர்க்கவும், வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்கிறோம்.

8. சந்தனம் அபிஷேக பலன்:

மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொரு ளாதாரத்தை அடைகிறோம்.

9. ஸ்வர்ண அபிஷேக பலன்:

பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற இறைவனுக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களை சொல்லி உருவேற்றிய குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடைகிறோம்.

Tags:    

Similar News