செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா 2வது அலை பொது முடக்கத்தால் 75 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

Published On 2021-05-04 09:16 GMT   |   Update On 2021-05-04 09:16 GMT
நகரப்பகுதியில் 9.78 சதவீதம் பேரும், கிராமப் பகுதியில் 7.13 சதவீதம் பேரும் வேலை இழந்திருக்கிறார்கள்.
புதுடெல்லி:

கடந்த தடவை கொரோனா தொற்று பரவியபோது நாடு முழுவதும் பொது முடக்கம் மற்றும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்தார்கள்.

இப்போது கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. பல மாநிலங்களில் இதன் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக நோய் தாக்கம் அதிகமாக உள்ள மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு, பகல் நேரங்களில் பொது முடக்கம் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக பல தொழில்கள் முடங்கி இருக்கிறது. பலரும் வேலையை இழந்து வருகிறார்கள். இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் ஒவ்வொரு மாதமும் உள்ள வேலை வாய்ப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவது வழக்கம்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் 75 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள் என்று அந்த அமைப்பு கூறி உள்ளது. கடந்த மாதம் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த வேலை இழப்புகள் ஏற்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதாவது வேலை இழப்பு 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 4 மாதத்தில் இருந்ததை விட அதிகமாகும்.

தேசிய அளவில் வேலை இழப்பு 7.97 சதவீதமாக இருக்கிறது.

அதிலும் நகரப் பகுதிகளில்தான் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நகரப்பகுதியில் 9.78 சதவீதம் பேரும், கிராமப் பகுதியில் 7.13 சதவீதம் பேரும் வேலை இழந்திருக்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் வேலை இழப்பு 6.5 சதவீதமாக இருந்தது. 2-வது அலை பரவலுக்கு பிறகு அதன் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2-வது அலை முடிவுக்கு வரும் வரை இது தொடரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Tags:    

Similar News