செய்திகள்
வீரமரணமடைந்த ராணுவவீரர் சிவச்சந்திரன் நினைவாக கார்குடி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம்.

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த அரியலூர் ராணுவ வீரருக்கு மணிமண்டபம் திறப்பு

Published On 2020-02-15 07:42 GMT   |   Update On 2020-02-15 07:42 GMT
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த அரியலூர் ராணுவ வீரருக்கு அவரது குடும்பத்தார் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சொகுசு வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே அவரது குடும்பத்தார் சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சமாதியில் மணிமண்டபம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அங்கு சிவச்சந்திரன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய அவரது மனைவி காந்திமதி நிருபர்களிடம் கூறுகையில்,

நாட்டை காக்க ராணுவ வீரர்கள் செய்த தியாகத்தை ஒவ்வொருவருக்கும் அறிய செய்ய வேண்டும். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீரமரணம் அடைந்த எனது கணவர் சிவச்சந்திரனின் சிலை திறக்கப்படும் என்று அறிவித்து ஒரு ஆண்டுகள் ஆகியும், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.


கலெக்டர் அலுவலகத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்கள் சிலையை உடனே நிறுவ வேண்டும். அப்போதுதான் அந்த மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் இருந்தார்கள் என்பது குறித்தும் அவர்கள் தாய் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள் என்பது குறித்தும் தெரியவரும். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சிலை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கணவனை இழந்ததால் மிகவும் சிரமப்படுகிறோம். எனது கணவர் இறக்கும் போது நான் கர்ப்பமாக இருந்தேன். தற்போது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளேன். எனது மகனை ராணுவ வீரராகவும், மகளை ஐ.ஏ.எஸ். ஆக்குவதுதான் எனது கனவு என்றார்.
Tags:    

Similar News