செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு செல்லும் தேர்தல் பணியாளர்கள்.

மேற்கு வங்காளத்தில் இன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு - 34 தொகுதிகளில் பலப்பரீட்சை

Published On 2021-04-25 18:39 GMT   |   Update On 2021-04-25 18:39 GMT
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகின்றன. கடந்த மார்ச் 27-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், கடந்த 22-ந்தேதி 6-ம் கட்ட தேர்தல் முடிந்தது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் இன்று (திங்கட்கிழமை) 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகின்றன. கடந்த மார்ச் 27-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், கடந்த 22-ந்தேதி 6-ம் கட்ட தேர்தல் முடிந்தது.

இதன் மூலம் மொத்தம் 223 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவு மீதமுள்ள நிலையில், இதில் 7-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தெற்கு தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 34 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது.



இந்த 7-ம் கட்டத்தில் 36 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு திட்டமிட்டிருந்த நிலையில், சம்சேர்கஞ்ச், ஜாங்கிப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணமடைந்ததால், அந்த தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இன்றைய தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 268 பேர் களத்தில் உள்ளனர். இதில் 37 பேர் பெண்கள் ஆவர்.

இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் சார்பில் 34 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். காங்கிரஸ்-இடதுசாரிகள் இணைந்த கூட்டணியில் காங்கிரஸ் 18 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 12 இடங்களிலும், ஐ.எஸ்.எப். 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இந்த வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை 81.88 லட்சம் வாக்காளர்கள் இன்று நிர்ணயிக்கிறார்கள். இதற்காக 11,376 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டு உள்ளன.

இன்றைய தேர்தல் களத்தில் மாநில மந்திரிகளான சுப்ரதா சகா, பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மலாய் கதக் மற்றும் சோவோந்தேவ் சட்டோபாத்யாய் ஆகியோர் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். பா.ஜனதாவின் அசோக் குமார் லகிரி, குமார் ஜிதேந்திர திவாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்தியக்குழு உறுப்பினர் அப்பாய் ராய் சவுத்ரி, காங்கிரஸ் தலைவர்கள் மோஸ்தாக் ஆலம், மைனுல் ஹக் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

மேற்கு வங்காள சட்டசபை களத்தில் தொடக்கம் முதலே அனல் பறந்து வந்த நிலையில், கொரோனா 2-வது அலை, தேர்தல் பிரசாரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகள் மற்றும் தலைவர்களே தானாக முன்வந்து பிரசாரங்களை ரத்து செய்த நிகழ்வுகள் போன்றவற்றால் கடந்த சில நாட்களாக தேர்தல் களத்தில் மந்தமான சூழல் நிலவுகிறது.

எனினும் இன்றைய வாக்குப்பதிவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக வன்முறை, மோதல் சம்பவங்களை தடுக்க துணை ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் இன்று 7-ம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் நேற்று அங்கு பல இடங்களில் அரசியல் மோதல்கள் நிகழ்ந்தன. குறிப்பாக முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சேகலிபாராவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக நாடியா மாவட்டத்தின் போனாலியில் நாட்டு குண்டு வெடித்ததில் சுஷந்தா ராய் என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது நண்பருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வாக்குப்பதிவுக்கு முன்தினம் நடந்த இத்தகைய வன்முறை சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News