லைஃப்ஸ்டைல்
ஆச்சரியப்படுத்தும் ‘ஆன்லைன்’ ஆசிரியர்கள்

ஆச்சரியப்படுத்தும் ‘ஆன்லைன்’ ஆசிரியர்கள்

Published On 2021-01-05 02:17 GMT   |   Update On 2021-01-05 02:17 GMT
டிஜிட்டல் சாதனங்கள் வழியாக பல ஆசிரியர்கள் மாணவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறார்கள்.
கொரோனா ஏற்படுத்தி இருக்கும் அச்சுறுத்தலால் கல்வி முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. டிஜிட்டல் சாதனங்கள் வழியாக பல ஆசிரியர்கள் மாணவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறார்கள். வீடியோக்கள் வழியாக வகுப்பில் பாடம் நடத்தும் சூழலையும் மாணவர்களிடத்தில் ஏற்படுத்துவதற்கு மெனக்கெடுகிறார்கள்.

ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை வீடியோவாக பதிவு செய்வதற்கு உபயோகப்படுத்தும் செல்போன் அல்லது கேமராவை நிறுவி வைப்பதற்கு முக்கோண வடிவ ஸ்டாண்டு தேவைப்படும். இது பெரும்பாலும் தொழில் ரீதியான வீடியோ பயன்பாட்டுக்குத்தான் அதிகமாக உபயோகப்படுத்தப்படும். அது இல்லாத சூழலில் ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறையை வீடியோவாக பதிவு செய்யும் செல்போனை நிறுவி வைப்பதற்கு, பலவிதமான மாற்று வழிமுறைகளை கையாள்கிறார்கள். அவை பலருடைய கவனங்களை ஈர்த்திருப்பதோடு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு பலருடைய பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

அத்தகைய புதுமையான வழிமுறையில் ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களில் ஒருவர், மவுமிதா. புனேவை சேர்ந்த இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்போனை நிறுவி வைப்பதற்கு துணிகளை உலர வைப்பதற்கு பயன்படுத்தப்படும் ‘ஹேங்கரை’ ஸ்டாண்டாக மாற்றி இருக்கிறார். அதன் நடுப்பகுதியில் துணியை கொண்டு செல்போனை கட்டிவைத்திருக்கிறார். ஹேங்கரின் இருமுனைகளிலும் நாடா போல் துணியை கட்டி தொட்டில்போல் தொங்கவிட்டிருக்கிறார். ஹேங் கரின் கீழ் பகுதியில் நாற்காலி ஒன்றை வைத்து அதிலும் நாடா துணியை இழுத்துப்பிடித்து செல்போன் கீழே விழாத அளவுக்கு இறுக்கமாக கட்டிவைத்திருக்கிறார்.

மவுமிதா நடத்தும் பாடத்தை செல்போன் அந்தரத்தில் தொங்கியபடி வீடியோவாக பதிவு செய்கிறது. அந்த வீடியோ வழியாக வீட்டில் இருந்தபடி மாணவர்கள் மவுமிதா நடத்தும் பாடத்தை ஆன்லைனில் கற்கிறார்கள். “என்னிடம் இதற்கான நவீன முக்காலி இல்லாததால் எனது வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்கு இந்த யுக்தியை கையாண்டிருக்கிறேன். எனது ஒரே நோக்கம் மாணவர்களுக்கு வகுப்பறை சூழலை உருவாக்கிக்கொடுக்கவேண்டும் என்பதுதான். பள்ளிக்கூடத்தில் எப்படி பாடம் நடத்துவேனோ அதுபோலத்தான் இப்போதும் ஆன்லைன் வழியாக பாடங்களை கற்கிறார்கள். இந்த வழிமுறை மாணவர்களுக்கு பலனளிப்பதாக அமைந்திருக்கிறது” என்கிறார்.

மவுமிதா தனது வீட்டில் செல்போனை ஹேங்கரில் கட்டி தொங்கவிட்டு பாடம் எடுத்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரது முயற்சியை பலரும் பாராட்டியதோடு அதுபோல் மாற்றுவழி முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். சிலர் மவுமிதாவுக்கு உதவி செய்வதற்கும் முன்வந்திருக்கிறார்கள்.

“உங்களுக்கு இதற்காக தேவைப்படும் நவீன முக்காலி வழங்குவதற்கு விரும்புகிறேன். நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். உங்களுடைய சக ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அவர்களுக்கும் அனுப்பிவைக்கிறேன். உங்கள் பணியை மேலும் சிறப்பாக தொடருங்கள்” என்று ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

குஜராத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்தபடி மற்றொரு நாற்காலியில் நோட்டை வைத்து எழுதுகிறார். அந்த நாற்காலியின் கைப்பிடிப்பகுதிகள் மீது நீளமான ஒரு பொருளை சொருகிவைத்து அதன் மீது செல்போனை வைத்திருக்கிறார். அந்த செல்போன் அந்த ஆசிரியர் எழுதுவதை வீடியோவாக பதிவு செய்கிறது. அது ஆன்லைன் வழியாக மாணவர்களை சென்றடைகிறது. மற்றொரு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் நீளமான குச்சியில் செல்போனை கட்டிவைத்து ஆன்லைன் வகுப்பு நடத்துகிறார். சில ஆசிரியர்கள் செல்பி எடுப்பதற்கு பயன்படுத்தும் ஸ்டிக்கை ஸ்டாண்டாக மாற்றி இருக்கிறார்கள். 
Tags:    

Similar News