கோவில்கள்
மகா பைரவ ருத்ர ஆலயம் - மகேந்திரா சிட்டி

மகா பைரவ ருத்ர ஆலயம் - மகேந்திரா சிட்டி

Published On 2022-01-10 06:53 GMT   |   Update On 2022-01-10 06:53 GMT
சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் கம்பீரமாக எழுந்துள்ளது.
உருவான வரலாறு

பக்தர்கள் கேட்பதை எல்லாம் தரக்கூடியவர் மகா பைரவர். ஆனாலும் என்ன காரணத்தினாலோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் பைரவருக்கு என்று தனி ஆலயங்கள் நிறைய இடங்களில் இல்லை. பைரவருக்கு என்று பிரத்யேகமாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தனி ஆலயங்கள் உள்ளன.
சென்னையில் மகா பைரவருக்கு என்று தனி கோவில் இல்லை என்ற குறை பக்தர்களிடம் நீண்ட நாட்களாக இருந்தது. அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் சென்னை புறநகரில் மகா பைரவர் ருத்ர ஆலயத்தை ஸ்ரீபைரவம் சித்தாந்தம் சுவாமிகள் உருவாக்கி இருக்கிறார்.

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் கம்பீரமாக எழுந்துள்ளது. மனதை மயக்கும் மகேந்திரா சிட்டி நகரின் உட்புறமாக புகுந்து சென்றால், அந்த வழித்தடம் நம்மை திருவடி சூலம் கிராமத்துக்கு அழைத்து செல்லும். அங்கு சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க, பச்சை பசேல் சூழ்நிலையில் மிகவும் ரம்மியமாக மகா பைரவ ருத்ர ஆலயம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த இடம் மலையடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பைரவர் இந்த இடத்தில் எழுந்தருளுவார் என்று அந்த கிராம மக்களே எதிர்பார்க்கவில்லை.

ஆனால் பைரவர் ஒன்றை நினைத்து விட்டால், பிறகு அதை யார் தடுக்க முடியும்?

அப்படித்தான் இந்த மகா பைரவ ருத்ர ஆலயத்தின் தோற்றத்திலும் அற்புதங்கள், மகிமைகள் நிறைந்துள்ளது. அதுபற்றி சொல்லும்போது மகா பைரவ ருத்ர ஆலய நிர்வாகிகள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.

ஏனெனில் 5 மாதத்துக்குள் ஒரு பிரமாண்ட ஆலயத்தை கட்டுவது என்பது எப்படி சாத்தியமாகும்? பைரவர் இட்ட உத்தரவால் எல்லாம் சாத்தியமாயிற்று. ஸ்ரீபைரவம் சித்தாந்தம் சுவாமிகள் மூலம் ஒவ்வொரு அசைவையும் செய்து வரும் மகா பைரவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு உத்தரவை வெளியிட்டார். சென்னையில் ஒரு ஆலயம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அந்த உத்தரவு.

மே மாதம் 19-ந்தேதி பைரவர் ஆலயம் கட்டுவதற்கான நிலத்துக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகள் அருளியிருந்தார். அதன் பேரில் மகா பைரவ ருத்ர ஆலய நிர்வாகிகள் சென்னை புறநகரில் இடம் தேடி அலைந்தனர்.

இந்த நிலையில், எந்த இடத்தில் மகா பைரவர் ஆலயம் அமைய நிலம் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படுவதற்கு முன்பே பைரவர் சிலை செய்ய ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகள் ஏற்பாடு செய்தனர். அதன்பேரில் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் உள்ள மலையில் இருந்து கல்எடுத்து பைரவர் சிலை உருவானது.
அதற்குள் மே மாதம் 19-ந்தேதி நெருங்கி விட்டது. மே மாதம் 18-ந்தேதி மாலை வரை பைரவர் ஆலயத்துக்கான இடம் எங்கு கிடைக்கும் என்பதில் ‘சஸ்பென்ஸ்’ நிலவியது.

19-ந்தேதி காலை ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகளை அழைத்துக் கொண்டு பக்தர்கள் புறப்பட்டனர். மறைமலைநகர் தாண்டியதும், ‘இடதுபக்கம் போ... ...’ என்று ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகள் உத்தரவிட பக்தர்கள் திருவடி சூலம் சாலையில் சென்றனர். அங்கு திருவடிசூலம் ஈச்சங்கரணை என்ற ஊர் அருகே வந்ததும், மலையடிவார பகுதி ஒன்றை ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகள் சுட்டிக் காட்டினார்.

அந்த பகுதியில் பூ போட்டு ‘இதுதான் மகா பைரவருக்கு ஆலயம் கட்டப்பட வேண்டிய இடம்’ என்றார்.

உடன் வந்த பக்தர்களுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக இருந்தது.

இந்த நிலம் யாருக்கு சொந்தம் என்று கூட தெரியாதே... ... எப்படி இதை வாங்குவது? என்று தவித்தப்படி இருந்தனர்.

இதை உணர்ந்த ஸ்ரீபைரவம் சித்தாந்தம் சுவாமிகள், ‘கவலைப்படாதீர்கள்... ... இன்னும் 10 நிமிடத்தில் இந்த நிலத்தின் சொந்தக்காரர் இங்கு வருவார்.

உங்களுக்கே அவர் இந்த இடத்தைத் தந்து விடுவார்’ என்றார்.

அவர் சொன்னது போலவே, 10 நிமிடங்கள் கழித்து அந்த நிலத்தின் உரிமையாளர் அங்கு வந்தார். ஆலய நிர்வாகிகளிடம், ‘நீங்கள் யார்? என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

ஆச்சரியத்தில் மிதந்த ஆலய நிர்வாகிகள், ‘இந்த இடத்தில் நாங்கள் மகா பைரவருக்கு ஆலயம் கட்ட விரும்புகிறோம். இந்த நிலத்தை கோவில்கட்ட தருவீர்களா?’ என்றனர்.

அந்த நிலத்தின் உரிமையாளர், வேறு எந்த கேள்வியும் கேட்கவில்லை.

‘கோவில் கட்டத்தானே கேட்கிறீர்கள். தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அன்றே பைரவர் ஆலய நிலத்துக்கான அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. 9 ஏக்கர் 28 சென்ட் இடம் ஸ்ரீமகா பைரவர் ருத்ர ஆலயத்துக்கு சொந்தமானது.

அடுத்த சில நாட்களில் மைலாடியில் தயாராக செய்து வைக்கப்பட்டிருந்த மகா பைரவர் சிலை நேராக இந்த ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டது. அதன்பிறகு அங்கு ஒரு மண்டலத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னர் ஸ்ரீமகா பைரவர் ருத்ர ஆலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 5 மாதத்துக்குள் இடம் வாங்கி, ஆலயத்தை கட்டி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்றால் பைரவர் அருள் இல்லாமல் இந்த அற்புதம் நிகழ வாய்ப்பே இல்லை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்த ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் பைரவரின் உத்தரவை ஏற்று சென்னை மேற்கு தாம்பரம், கல்யாண்நகர், 4-வது குறுக்குத் தெருவில் மந்திராலயம் அமைத்து, தன்னை நாடி வரும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து வருகிறார். ஒருவரை பார்த்த உடனேயே அவர் வாழ்க்கையை பற்றி ஸ்ரீபைரவ சித்தாந்த சுவாமிகளால் சொல்ல முடிகிறது. இவர் மாய, மாந்திரீக சக்திகள் எதுவும் செய்வதில்லை. மூட நம்பிக்கைகளை வளர்ப்பதில்லை.

மாறாக பைரவமாக இருந்து மக்களுக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார். பைரவத்தின் அருளை தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பெற்று பயன் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் சென்னை அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் இருந்து உள் செல்லும் திருவடி சூலம் சாலையில் உள்ள ஈச்சங்கரணையில் மகாபைரவர் ருத்ர ஆலயத்தை அமைத்துள்ளார்.

சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் அருமையான தலமாக உள்ளது. சிவ ஆகம விதிகளின்படி இங்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை நாட்களில் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
அரண்மனை கட்டிடக் கலையில் கோவில் அமைப்பு, ஆடும் கும்ப கலசம், பைரவரின் கூம்பு வடிவ கருவறை என்று இந்த ஆலயம் முழுக்க, முழுக்க மற்ற ஆலயங்களில் இருந்து வித்தியாசப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மகா பைரவ ருத்ர ஆலயத்தின் பிரதான சிறப்பு என்ன தெரியுமா? இந்த கிழமைதான் பைரவரை கும்பிட வேண்டும்.இப்படித் தான் வணங்க வேண்டும் என்று எந்த ஒரு கட்டுப்பாடோ, வரைமுறையோ இங்கு கிடையவே கிடையாது.

உங்களுக்கு எப்போது வசதிப்படுகிறதோ, அப்போது வந்து வழிபடுங்கள் என்கிறார் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள். சிலர் பைரவருக்குஅது படைக்க வேண்டுமே.. இது செய்ய வேண்டுமே என்று நினைப்பதுண்டு. அதற்கும் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் விளக்கம் அளித்துள்ளார்.

பைரவருக்கு ஒரு முழம் பூ வாங்கிப் போட்டாலே போதும். அவர் அருள் கிடைத்து விடும் என்கிறார். ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் இதுபற்றி கூறுகையில், “பைரவரை இயல்பான நிலையில் வணங்குங்கள். ஆனால் அவரை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டியவை எல்லாம் இடையூறு இல்லாமல் கிடைக்கும்‘’ என்கிறார்.

சில ஆலயங்களில் இத்தனை வாரம் வர வேண்டும். இன்னென்ன செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால் மகாருத்ர பைரவ ஆலயத்தில் அப்படியெல்லாம் சொல்வதில்லை. அதற்கு மாறாக ஆண்டுக்கு ஒரு தடவை இத்தலத்தில் காலடி எடுத்து வைத்து விட்டுச் சென்றாலே போதும் என்கிறார்கள்.

ஆண்டுக்கு ஒரு தடவை வந்து வழிபட்டாலே ஒருவரது ஆத்மா சுத்தமாகி அவருக்கு கிடைக்க வேண்டிய எல்லா பலன்களும் கிடைத்து விடும் என்று ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் அருளியுள்ளார். எனவே இது இந்த தலத்துக்கு உரிய தனித்துவமாக உள்ளது. அதன்படி பார்த்தால் மகா ருத்ர ஆலய பைரவரை நெருங்க, நெருங்க உங்கள் கர்ம வினைகள் காணாமல் போய் விடும்.
Tags:    

Similar News