ஆன்மிகம்
கிருஷ்ணன்

இன்று கிருஷ்ண ஜெயந்தி: வழிபடும் முறை

Published On 2020-08-11 08:20 GMT   |   Update On 2020-08-11 08:20 GMT
கண்ணன் தேவகியின் மகனாக, தேய்பிறை அஷ்டமி நள்ளிரவில் பிறந்தார். அந்த நாளே ‘கிருஷ்ண ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.
வசுதேவரும், தேவகியும் மகிழ்ச்சியோடு பேசியபடி இருக்க, அவர்கள் அமர்ந்திருந்த தேர் மதுராவின் அரண்மனை நோக்கி விரைந்தது. அந்தத் தேரை ஓட்டிய கம்சனும் கூட மகிழ்ச்சியாகவே இருந்தான். தன் தங்கை தேவகியின் திருமணம் அவனுக்கு சந்தோஷத்தை அளித்திருந்தது. அப்போது வானில் இருந்து ஒலித்த அசரீரி, “கம்சா.. உன்னுடைய தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உன்னுடைய உயிருக்கு ஆபத்து” என்றது.

அதைக்கேட்டதும் தங்கை என்றும் பாராமல் அவளைக் கொல்லத் துணிந்து விட்டான், கம்சன். வசுதேவர்தான், “என் பிள்ளையால் தானே ஆபத்து. எங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன் கையில் தந்து விடுகிறேன்” என்று கூறியதும்தான், தன் எண்ணத்தை மாற்றினான். இருந்தாலும் வசுதேவரும், தேவகியும் தன் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை சிறையில் அடைத்தான். சிறையில் அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு பிள்ளையையும் தரையில் அடித்துக் கொன்றான், கம்சன். 7 பிள்ளைகள் அநியாயமாக இறந்துவிட்டன. 8-வது குழந்தையாக கிருஷ்ணரை, நள்ளிரவில் ஈன்றெடுத்தாள், தேவகி. காலையில் கம்சன் வந்ததும் அந்தக் குழந்தையும் இறந்துபோகும் என்பதை நினைத்து தேவகியும், வசுதேவரும் வருத்தம் கொண்டனர்.

அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக உருவெடுத்து, “நானே உங்கள் பிள்ளையாக வந்துள்ளேன். என்னை கோகுலத்தில் நந்தகோபரின் வீட்டில் சேர்த்துவிட்டு, அங்குள்ள பெண் குழந்தையை எடுத்து வந்து இங்கே சேர்த்துவிடுங்கள்” என்றார்.

சிறைச்சாலையில் இருந்து எப்படி வெளியேறுவது.. காவலர்கள் மயங்கிச் சரிந்தார்கள். கதவுகள் தானாக திறந்துகொண்டன. கிருஷ்ணரை ஒரு கூடையில் வைத்து தலைச்சுமையாக கொண்டுபோய் கோகுலத்தில் விட்டு விட்டு, அங்குள்ள பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார் வசுதேவர். மறுநாள் காலை வந்த கம்சன், பெண் குழந்தையை கொல்லப்போக, அது மேலெழுந்து பறந்து, துர்க்கையாக உருவெடுத்தது. “கம்சா.. உன்னைக் கொல்லப்போகிறவன் வேறு ஒரு இடத்தில் வளர்ந்து வருகிறான்” என்று கூறி மறைந்தது.

அன்று முதல் நாடு முழுவதும் கிருஷ்ணரை தேடினான், கம்சன். கண்டுபிடித்ததும் பல அரக்கர்களை அனுப்பி கொல்ல முயன்றான். எதுவும் நடக்கவில்லை. கிருஷ்ணருக்கு 7 வயதானபோது, மல்யுத்தப் போட்டிக்காக கம்சன் அவருக்கு அழைப்பு விடுத்தான். அங்கு வந்ததும் பெரிய பெரிய பயில்வான்களுடன் கிருஷ்ணரை மோதச் சொன்னான். ஆனால் அவர்களை எல்லாம் வென்று, இறுதியில் கம்சனையும் வதம் செய்தார், கண்ணன்.

கண்ணன் தேவகியின் மகனாக, தேய்பிறை அஷ்டமி நள்ளிரவில் பிறந்தார். அந்த நாளே ‘கிருஷ்ண ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.

வழிபடும் முறை

கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை 6 மணிக்கு, வீட்டில் கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன், கண்ணனுக்கு பிடித்தமான பலகாரங்களை செய்து படைக்க வேண்டும். பின்னர் அவற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி தங்கும். அகந்தை அகலும். அரசியல் ஞானம் உண்டாகும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும். விளைச்சல் அதிகரிக்கும்.
Tags:    

Similar News