செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது- எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Published On 2020-11-27 19:21 GMT   |   Update On 2020-11-27 19:21 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்று திருவள்ளுவரால் உயர்வாய் உரைக்கப் பெற்ற உழவர்களின் பெருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி, 14 மற்றும் 15-ந் தேதிகளில் சுப்ரீம் கோர்ட்டிற்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கோர்ட்டுகளில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரது வழியில் செயல்படும் எனது தலைமையிலான அரசும் தொடர்ந்து இக்கோரிக்கையினை வலியுறுத்தி வருகிறது.

தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கல் நன்னாளின் சிறப்பினை அனைவரும் அறியும் வண்ணம் சுப்ரீம் கோர்ட்டிற்கு விடுமுறை அறிவித்த சுப்ரீம் கோர்ட்டிற்கு இத்தருணத்தில் என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News