செய்திகள்
தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன்

புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா?- கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

Published On 2021-04-29 06:00 GMT   |   Update On 2021-04-29 06:00 GMT
முழு ஊரடங்கை அமல்படுத்தினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் புதிய கட்டுப்பாடுகளை கூடுதலாக கொண்டு வருவது குறித்தும் கருத்து கேட்கப்பட்டது.
சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 34 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 571 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,335 முதியவர்களும் அடங்குவர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,764 பேரும்,செங்கல்பட்டில் 1,219 பேரும் கோவையில் 963 பேரும், திருவள்ளூரில் 751 பேரும், திருநெல்வேலியில் 741 பேரும், தூத்துக்குடியில் 594 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 98 பேர் உயிர் இழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தற்போது 1 லட்சத்து 10 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் உள்ளனர். தினமும் கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கல்லூரிகளிலும் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகளில் இடம் கிடைக்காதவர்கள் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதன் காரணமாக கடந்த 26-4-2021 அதிகாலை 4 மணி முதல் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு மீண்டும் தியேட்டர்கள், மால்கள், கேளிக்கை கூடங்கள், கூட்ட அரங்குகள், பெரிய வணிக வளாகங்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 பேர்களும், இறுதி ஊர்வலம் சார்ந்த சடங்குகளில் 25 பேர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது என்றும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இது தவிர மேலும் பல்வேறு நடைமுறைகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டது. இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் இன்னும் கொரோனா பரவுவது குறையவில்லை.

இதனால் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இன்றைய ஆலோசனை கூட்டங்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் ஆகிய 6 மாவட்ட கலெக்டர்களும் சென்னை, கோவை மாநகராட்சி கமி‌ஷனர்களும் பங்கேற்றனர்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்களுடன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் அதுல்யமிஸ்ரா, போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். மே மாதம் ஊரடங்கில் ஏற்படுத்தப்பட வேண்டிய கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்பட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கை சில நாட்களுக்கு அமல்படுத்தலாமா? என்பது குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.

முழு ஊரடங்கை அமல்படுத்தினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் புதிய கட்டுப்பாடுகளை கூடுதலாக கொண்டு வருவது குறித்தும் கருத்து கேட்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு குறித்து அரசு அறிக்கை வெளியிட்டு வருவதால் 1-ந் தேதியில் இருந்து பின்பற்றப்பட வேண்டிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதித்துள்ளனர்.

அநேகமாக இன்று மாலை அல்லது நாளை புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கடந்த வாரம் கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் 26-ந் தேதி முதல் கொண்டுவரப்பட்டு இருந்தது.



இந்த நிலையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சென்று சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நேற்று ஆலோசித்துவிட்டு வந்தார்.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அடுத்த மாதம் கொண்டுவரப்பட உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Tags:    

Similar News