செய்திகள்
மதுரை சித்திரை திருவிழா

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவுக்கு விதிவிலக்கு கிடைக்குமா?- பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-04-09 04:33 GMT   |   Update On 2021-04-09 05:41 GMT
கொரோனா நோய் பரவல் காரணமாக நேற்று கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிப்பதாக அரசு அறிவித்தது. இது மதுரை சித்திரை திருவிழாவை எதிர்நோக்கி இருந்த பக்தர்களிடம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாத திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.

இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். கடந்தாண்டு கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற இருந்த சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.

மீனாட்சி அம்மன் திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் சுவாமி சன்னதியில் உள்ள சேத்தி மண்டபத்தில் 3 சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. அதே போன்று கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. அங்கும் கோவிலுக்குள் பக்தர்கள் இன்றி எதிர்சேவை, அழகர்ஆற்றில் இறங்குதல், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கொரோனா நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த டிசம்பர் முதல் திருவிழாக்கள் வழக்கம் போல் நடத்தப்பட்டன.

எனவே இந்தாண்டு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல்15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என பக்தர்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்தனர். அதற்கான ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. அதற்கு மத்தியில் தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. இந்தநிலையில் நேற்று கொரோனா நோய் பரவல் காரணமாக கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிப்பதாக அரசு அறிவித்தது. இது மதுரை சித்திரை திருவிழாவை எதிர்நோக்கி இருந்த பக்தர்களிடம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதுபற்றி அறிந்ததும் பக்தர்கள் நேற்று மாலை பெருமளவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கொரோனாவால் கோவிலில் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டால் அம்மனை பார்க்க முடியாது. எனவே தான் தரிசிக்க வந்தோம் என்றனர்.



இதற்கிடையே கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று மாலை சித்திரை திருவிழா தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோவில் அதிகாரிகள், பட்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் தெரிவிக்கப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவிழா தொடங்க இன்னும் 5 நாட்கள் தான் உள்ளது. எனவே பக்தர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவுக்கு விதி விலக்கு அளித்து, இந்தாண்டு விழாவை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கினால், 22-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், 23-ந் தேதி திக்கு விஜயமும், 24-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 25-ந் தேதி தேரோட்டமும் நடைபெற வேண்டும்.

அதே போன்று கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா நிர்ணயித்த நாளில் தொடங்கும் பட்சத்தில் வருகிற 26-ந் தேதி கள்ளழகர் எதிர்சேவையும், 27-ந் தேதி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News