செய்திகள்
கோப்புப்படம்

தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி- திருப்பூர் பனியன் நிறுவனங்கள் ஆர்வம்

Published On 2021-04-10 09:08 GMT   |   Update On 2021-04-10 09:08 GMT
பூலுவப்பட்டியில் உள்ள ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் 171 தொழிலாளருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருப்பூர்:

கொரோனாவால் திருப்பூர் பின்னலாடை தொழில் மீண்டும் சரிவில் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதில் உற்பத்தியாளர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இதையடுத்து திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் கொரோனா தடுப்பு பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொழிலாளருக்கு வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, கை கழுவ சோப்பு, சானிடைசர் வழங்கப்படுகிறது. முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளருக்கு, தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை தயாராகி வருகிறது. இந்நிலையில் சில நிறுவனங்கள் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்த முந்தி கொண்டுள்ளன. 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களை அங்கீ காரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.

தொற்று அதிகரித்தால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை இழக்க நேரிடும். இதை கருத்தில் கொண்டு, தங்கள் தொழிலாளருக்கு தடுப்பூசி போடுவதற்கான கட்டண தொகை முழுவதையும் நிறுவனங்களே ஏற்றுக் கொள்கின்றன. பூலுவப்பட்டியில் உள்ள ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் 171 தொழிலாளருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இது குறித்து சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் திருக்குமரன் கூறியதாவது:-

தொற்று மீண்டும் அதிகரித்தால் தொழிலாளர்களும், தொழில்முனைவோரும் பெரும் பாதிப்புகளை எதிர் கொள்ள நேரிடும். இதை கருத்தில் கொண்டே ஆடை உற்பத்தி நிறுவனங்கள் சொந்த செலவில் தொழிலாளருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த துவங்கியுள்ளன. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தொற்று பரவலை வெகுவாக குறைக்க முடியும். தொழிலாளரையும், தொழிலையும் பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News