செய்திகள்
பிரியங்கா காந்தி

மத்திய அரசின் அலட்சியத்தால் கொரோனாவில் உயிர்கள் இழப்பு - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

Published On 2021-05-26 01:17 GMT   |   Update On 2021-05-26 01:17 GMT
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கொரோனா பாதிப்பு தொடர்பான யார் பொறுப்பு? என்ற பிரசாரத்தை தொடங்குவதாக முகநூல் பதிவு மூலம் அறிவித்தார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக ‘யார் பொறுப்பு?’ என்ற பிரசாரத்தை தொடங்கிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மத்திய அரசின் அலட்சியத்தால் எண்ணற்றால் உயிர்கள் இழக்கப்பட்டுவிட்டன என்று குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கொரோனா பாதிப்பு தொடர்பான ‘ஜிம்மெதார் கோன்?’ (யார் பொறுப்பு?) என்ற பிரசாரத்தை தொடங்குவதாக முகநூல் பதிவு மூலம் நேற்று அறிவித்தார். இந்த பிரசாரத்தின் ஓர் அங்கமாக, கொரோனா தொற்றை மத்திய அரசு கையாண்டவிதம் குறித்து கேள்விகள் எழுப்புவேன் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா 2-வது அலை நாட்டைத் தாக்கி, மக்கள் ஆஸ்பத்திரி படுக்கைகள், ஆக்சிஜன், தடுப்பூசிகள், மருந்துகளுக்காக தவித்தபோது, முன்கூட்டிய தயார்நிலை, இருக்கும் வசதிகளை பயன்படுத்தி உயிர்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் மத்திய அரசு, அமைதியாக வேடிக்கை பார்க்கும் நிலைக்குப் போய்விட்டதால், நாட்டில் வலிமிகுந்த சூழல் ஏற்பட்டது. ஏற்பாடுகளை செய்வதாகக் கூறி மத்திய அரசு அலட்சியத்தைத்தான் வெளிப்படுத்தியது.

தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது, கடந்த ஆண்டில் ஆக்சிஜன் ஏற்றுமதியை இருமடங்கு ஆக்கியது, மக்கள்தொகைக்கு ஏற்ப தடுப்பூசி இருப்பு இல்லாத நிலையில் அவற்றின் இறக்குமதி உத்தரவுக்கு தாமதப்படுத்தியது என்று பல முனைகளில் அரசின் செயல்பாடுகள் பொறுப்பற்ற விதமாகவே இருந்தன.

அரசின் இதுபோன்ற அலட்சியமான செயல்பாடுகளால் எண்ணற்ற உயிர்கள் இழக்கப்பட்டுவிட்ட நிலையில், கேள்விகள் எழுப்புவது அவசியமாகிறது. அதனால்தான் ‘யார் பொறுப்பு?’ என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளேன்.

இதில் மக்களின் சார்பில் கேள்விகள் எழுப்புவேன். அதற்கு பதில் அளிப்பது மத்திய அரசின் கடமை. இதுதொடர்பாக மக்களது ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
Tags:    

Similar News