செய்திகள்
அசாதுதீன் ஒவைசி

என்னை யாராலும் பணத்தால் வாங்க முடியாது -மம்தாவுக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி

Published On 2020-12-16 09:35 GMT   |   Update On 2020-12-16 09:35 GMT
அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, பாஜகவின் பி-டீம் என விமர்சனம் செய்த மம்தா பானர்ஜிக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார்.
கொல்கத்தா:

294 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் பீகார் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள சீமாஞ்சல் பிராந்தியத்தில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, அடுத்து மேற்கு வங்கத்தில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி வெளியிட்டார். அவர் வேட்பாளர்களை நிறுத்தினால் சிறுபான்மையினர் வாக்குகள் பிரிந்து, ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதுபற்றி திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, கட்சி கூட்டத்தில் பேசியபோது, முஸ்லீம் வாக்குகளைப் பிரிக்க, ஐதராபாத்தில் இருந்து ஒரு கட்சியைக் கொண்டுவருவதற்காக பாஜக பல கோடி ரூபாய் செலவழிக்கிறது என விமர்சித்தார்.

‘இந்து வாக்குகளை பாஜக பெறும், இந்த ஐதராபாத் கட்சி முஸ்லிம் வாக்குகளை பெறும் என்பது அவர்களின் திட்டம். அண்மையில் பீகார் தேர்தலிலும் அவர்கள் அதையே செய்தார்கள். இந்த கட்சி பாஜகவின் பி-டீம் ஆகும்’ என்றும் மம்தா கூறினார்.

மம்தாவின் இந்த பேச்சுக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

அசாதுதீன் ஒவைசியை பணத்தால் வாங்கக்கூடிய ஒருவன் இன்னும் பிறக்கவில்லை. அவரது (மம்தா) குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவர் அமைதியிழந்து காணப்படுகிறார். அவர் தனது சொந்த கட்சியைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். அவரது கட்சியில் இருந்து பலர் பாஜகவுக்கு செல்கிறார்கள். அவர் பீகார் வாக்காளர்களையும், எங்களுக்கு வாக்களித்த மக்களையும் அவமதித்துள்ளார். முஸ்லிம் வாக்காளர்கள் ஒன்றும் உங்கள் (மம்தா) சொத்து அல்ல.

இவ்வாறு ஒவைசி கூறி உள்ளார்.
Tags:    

Similar News