லைஃப்ஸ்டைல்
பொறுமை மனிதனுக்கு பெருமை

பொறுமை மனிதனுக்கு பெருமை

Published On 2019-07-17 03:01 GMT   |   Update On 2019-07-17 03:01 GMT
தானங்களில் உயர்வாக இருப்பது நிதானம்தான். எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும். ஆனால்... நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து, பிறரையும் வாழவைக்கும்.
பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தாரே பூமியாள்வார் என்பதெல்லாம் பழமொழி. செயல்படுகிறவன் ஒருசெயலை நேர்த்தியாய், சரியான நேரத்தில் செய்து முடிப்பான். அதுவே பொறுமையில்லாதவனிடம் இராது. குறித்த நேரத்தில் செய்யவும் முடியாது. ஒரு இடத்திற்கு போக வேண்டியிருந்தால் கொஞ்சம் முன்னதாக கிளம்ப வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது என்று சரியான நேரத்தில் கிளம்பினால் என்னாகும். பதைபதைப்பு உண்டாகும். அந்த அவசர கதியில் பொறுமை இழந்து இன்னும் பாதகமான செயல்கள் தான் அரங்கேறும்.

தானங்களில் எத்தனையோ தானங்கள் இருக்கிறது. அத்தனை தானங்களிலும் உயர்வாக இருப்பது நிதானம்தான். எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும். ஆனால்... நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து, பிறரையும் வாழவைக்கும். மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டும். தன் காலம் வரை பிறரால் உயர்வாய் மதிக்கச் செய்யும். அந்த மகத்தான சக்தியை பொறுமையே தரும்.

ஒரு விஷயம் குறித்து இருவர் பேசத்தொடங்குகின்றனர். ஒருவர் முரண்பட்டு ‘அதெல்லாம் கிடையாது இதுதான் சரி’ என்பார் எதிர்பேச்சாளர். நிதானம் தவறும். வார்த்தைகள் மாறும். முன்பிருந்த நட்புக்கும், உறவுக்கும் விரிசலை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிடும். நாம் தவறும் நிதானம் ஒவ்வொன்றுமே ஒரு அடையாளத்தை விட்டுத்தான் செல்கிறது.

ஒரு விதை விதைத்தால் அது பலன்தரும் வரையிலும் காத்திருக்கத்தான் வேண்டும். அதை விடுத்து உடனே பலன் எதிர்பார்த்து நிதானம் தவறி தோண்டி எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தால், விதை பலன் தராது. பயனற்று போய்விடும். அம்மா ஒரு மாம் பழம் வாங்கி வைத்திருக்கிறார். அது முழுமையாக பழுக்காமல் சற்று காயாக இருக்கிறது. குழந்தையின் பார்வையில் பட்டுவிடுகிறது. பழுத்து சுவையாக இன்னும் இருநாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால்... அது பழுக்கும்வரை பொறுத்திருக்காத அந்தக் குழந்தை, உடனே சாப்பிடத் தொடங்கினால் புளிக்கத்தான் செய்யும். அதை இனிப்பாக சாப்பிட வேண்டுமென்றால் பொறுமையாகக் காத்திருந்து தான் ஆக வேண்டும். குழந்தைக்கு பொறுமையை நாம் தான் கற்றுத்தர வேண்டும்.

தயவு செய்து குழந்தைப் பருவத்திலேயே பொறுமையை கற்றுக்கொடுங்கள். முதலில் நீங்கள் பொறுமையாய் இருக்கப் பழகுங்கள். ஏனெனில்... உங்களில் பாதி உங்கள் குழந்தை. அண்ணன்-தம்பி பங்காளி சண்டை, சிறு வரப்புக்காக நீதிமன்றம் நாடும் உறவுகள் தான் எத்தனை? ஒரு எதிர்கால சந்ததிகளின் உறவுமுறைக்கே ஊறு விளைவிக்கும். உறவுகளின் ஆணிவேர் பிடுங்கி எறியப்படுகிறதே... காரணம் பொறுமையின்மைதானே. அதுமட்டுமா... யாரோ ஒருவர் வதந்தி எனும் தீயை கொளுத்தி போட்டிருப்பார். அது குடும்பத்தில் கொழுந்துவிட்டு எரியும். கொஞ்சம் பொறுமையாய் யோசித்தால் அது வதந்தி என்பது புரியும். பிரச்சினைகள் நம்மை விட்டு விலகி ஓடும்.

நீதிமன்றங்களில் தான் எத்தனை விவாகரத்து சம்பவங்கள். ரத்தமும் சதையுமாய் இணையப் பெற்ற கணவன் மனைவி விவாகரத்து வரை செல்ல அப்படி என்ன பிணக்கு? அடுப்பில் இருந்து இறக்கி வைத்த கொதிநீர், நாம் குடிக்க பயன்பட சற்று நேரம் தான் ஆகும். அதுபோல், கணவன் மனைவி கருத்து வேறுபாடும்.

சற்று நேரம் ஓய்வெடுங்கள் நல்ல முடிவு வரவேண்டும் என்ற முடிவோடு பேசுங்கள். பொறுமை எனும் தாரக மந்திரத்தை மனதில் பதிய வைத்தபடி பேசுங்கள். ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் பேச்சும் ஒருகலைதான். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி பேசுங்கள். உங்களின் எதிர்காலம் பகிருங்கள். பிள்ளைகளை நினைத்தால் உங்களின் பிரச்சினை சிறிதாகிப் போகும்.

கணவன் மனைவியை இணைக்கும் பாலம் குழந்தைதான் என்பதை உணருங்கள். தர்மம் என்ற ஒன்று மாபெரும் மேன்மையைத் தரும். பொறுமை என்ற ஒன்று சிறந்த அமைதியைத் தரும். கல்வி என்ற ஒன்று அளவற்ற நிறைவைத் தரும். அகிம்சை என்ற ஒன்று தொடர்ந்து சுகத்தைத் தரும் என்று கீதை சொல்கிறது. பொறுமையே வரம். பொறுமையே அறிவுள்ள செயல். பொறுமையே அமைதியின் பிறப்பிடம். பொறுமை ஒவ்வொரு மனிதனுக்குமான அணிகலன். பொறுமை ஒரு மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டுகிறது. பொறுமைதான் அன்பை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவரின் உயர்வுக்கும் பொறுமையே துலாக்கோல் பிடிக்கிறது. பொறுமையில்லாத மனிதன் முழுமையடைவதே இல்லை.

ராமாயணத்தில் சீதையின் புகழை இன்றளவும் நாம் பேசுவதற்குக் காரணம் சீதையின் பொறுமைதான். ஜனகரின் மகள் வனவாசத்தில் காடு மேடெல்லாம் கஷ்டப்பட்டது. ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு அசோக வனத்தில் சிறைப்பட நேர்ந்தது எத்தனை அல்லல். இத்தனையும் எதற்காக. அத்தனை பெரிய மகாராணியாக இருக்க வேண்டிய சீதாப்பிராட்டியே பொறுமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்பதை நமக்கு உணர்த்தத்தானே. மேலும் சிலப்பதிகாரம் தன்னை மறந்து தன் நிலைமறந்து மாதவியின் மஞ்சத்தில் மயங்கிக்கிடந்தானே கோவலன். எப்படியும் என் கணவன் மீண்டுவருவான் என்ற நம்பிக்கையோடு இருந்தாளே கண்ணகி. அந்தப் பொறுமையில்தான் அவள் இன்றளவும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

பொறுமையில்லாது வீழ்ந்து போனவர்களின் சரித்திரத்தை விட, பொறுமையால் வாழ்ந்து வரலாறு படைத்தவர்களை எண்ணிப்பார்ப்போம். புராண, இதிகாசத்தில் மட்டுமின்றி நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களானாலும் பொறுமை காத்து வாழும் மனிதர்களை பூஜிப்போம். பொறுமைக்கு இலக்கணமாய் நம் முன்னோர்கள் பூமியைச் சொல்வார்கள். அந்த பூமியை நாம் காலால் மிதிக்கிறோம். எட்டி உதைக்கிறோம். உமிழ்கிறோம். ஆனாலும், அது நமக்கு உண்ண உணவளிக்கிறது. தாகத்திற்கு நீர் தருகிறது. நாமும் நம் மனதை மெல்ல மெல்ல தட்டி எழுப்புவோம். பொறுமைக்கு நல்ல இலக்கணமாய் திகழ்வோம். பொறுமைதான் மனிதனுக்கு மிகவும் தேவை. பூவுகில் அதுதானே பெரிய சேவை. சோதனை காலம் வரும்போது, இன்னும் பொறுமை காப்போம். சுடச்சுட ஒளிரும் சங்கைப் போல நாமும் பொறுமை காத்து ஒளிர்வோம்.

அருப்புக்கோட்டை செல்வம். (தமிழக அரசின் குறள் பீட விருது பெற்ற எழுத்தாளர்)
Tags:    

Similar News