லைஃப்ஸ்டைல்
பெண்களுக்கான ‘வயாகரா’வும் பிரச்சினைகளும்..

பெண்களுக்கான ‘வயாகரா’வும் பிரச்சினைகளும்..

Published On 2021-02-24 07:48 GMT   |   Update On 2021-02-24 07:48 GMT
பெண்களுக்கான ‘வயாகரா’ தற்போது அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் அதனுடன் கூடவே சர்ச்சைகளும் வந்திருக்கின்றன. இந்த மருந்துகளைச் சாப்பிடுவதால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சில மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
பெண்களுக்கான ‘வயாகரா’ தற்போது அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் அதனுடன் கூடவே சர்ச்சைகளும் வந்திருக்கின்றன. இப்போதைக்கு அமெரிக்க மருந்தகங்களில், பெண்களுக்கு பாலுணர்வை அதிகரிக்கக் கூடிய அந்த மருந்து கிடைக்கிறது. அந்த மருந்தின் பெயர் ‘வைலீசி’ என்றாலும், அதை ‘பெண்களின் வயாகரா’ என்றே குறிப்பிடுகிறார்கள்.

அமெரிக்காவில் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானவை என மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் அரசு அமைப்பான உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம், ‘வைலீசி’க்கு அனுமதி அளித்தபோது, பெண்களின் பாலுறவு ஆரோக்கியத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஆரம்பத்தில் அமோக வரவேற்புக் கிடைத்தது. ஆனால் சில வாரங்களிலேயே புதிய சர்ச்சைகள் தலைதூக்கின. பாலுணர்வு விருப்பம் போன்ற சிக்கலான விஷயங்களில் மருந்துகளின் பங்கு என்ன என்பது பற்றி விவாதங்கள் எழத் தொடங்கின.

உண்மையில் பிரமெலனோடைட் பலன் தருமா? அதனால் ஏற்படக்கூடிய ஆரோக்கியப் பிரச்சினைகள் என்ன?

தானாகவே ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் மருந்தாக வைலீசி உள்ளது. இந்த மருந்து, பதற்றத்தைத் தணித்து, பாலுறவு ஆசையை அதிகரிக்கச் செய்கிறது. டேபோமைன் அளவை அதிகரிக்கச்செய்யும் இரண்டு நரம்பியல் கடத்திகளின் அளவைக் கட்டுப்படுத்தி, செரோட்டோனின் வெளியாவதைக் குறைத்து இது செயல்படுகிறது.

ஏற்கனவே சந்தையில் உள்ள, இதேபோன்ற ‘ஆட்யி’ என்ற மாத்திரையுடன், இந்தப் புதிய மருந்து போட்டியிட வேண்டியிருக்கும். ‘ஆட்யி’ மாத்திரை, 2015-ல் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாத்திரை ஆகும். அதை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்யி மாத்திரையால் குறைந்த பலன்தான் உள்ளது என்றும், அநேகமாக பாதுகாப்பற்றது என்றும் சில நிபுணர்கள் கூறிவரும் நிலையில், புதிய மருந்துக்கு அங்கீகாரம் அளித்தது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ஆட்யி மாத்திரையைப் பயன்படுத்தும்போது மதுப் பயன்பாடு கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் வைலீசி பயன்படுத்துபவர்கள் மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டிய அவசியம் இல்லை என்று அதைத் தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது லேசான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றாலும், வேகமான செயல்பாடு கொண்டது, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என அந்நிறுவனம் உத்தரவாதம் அளிக்கிறது.

ஆனால், மருந்து மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத் துறைகள் பற்றி செய்திகளை எழுதிவரும் பத்திரிகையாளர் மேடலெய்ன் ஆர்ம்ஸ்டிராங், ‘‘பாலுறவு கொள்வதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு முன்னதாக வைலீசி மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போது குமட்டல் போன்ற உணர்வு ஏற்படுவதாக இதைப் பயன்படுத்திய 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் ஒரு மணி நேரத்துக்குள் அப்படி ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்’’ என்கிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வின்படி, பாலியல் நாட்டமின்மை அமெரிக்கப் பெண்களில் 10-ல் ஒருவருக்கு உள்ளது. அவர்களில் பலர், ஒருபோதும் சிகிச்சையை நாடியதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

அதுகுறித்து ஆர்ம்ஸ்டிராங், ‘‘பெண்கள் பாலியல் நாட்டமில்லாமல் இருப்பது நோயா என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. சுமார் 60 லட்சம் பெண்களுக்கு மாதவிலக்குக்கு முந்தைய பருவத்தில் இந்தப் பாதிப்பு இருக்கிறது என்றும், தங்களுக்கு மருத்துவக் குறைபாடு இருப்பதையே 95 சதவீதம் பெண்கள் அறிந்திருக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்’’ என்கிறார்.

வைலீசி மருந்தின் பரிசோதனைக் காலத்தில் கவனிக்கப்பட்ட பெரும்பாலான பக்க விளைவுகளில், இதைப் பயன்படுத்திய 40 சதவீதம் பேருக்கு ஓரளவு முதல் தீவிர குமட்டல் இருந்திருக்கிறது. காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட பக்கவிளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. வைலீசி மருந்தின் நீண்டகாலப் பாதிப்புகள் பற்றி மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் பரிசீலிக்கவில்லை என்று மகளிர் ஆரோக்கிய அமைப்புகள் பலவும் குற்றஞ்சாட்டுகின்றன.

இப்போதைக்கு, பாலியல் நாட்டமின்மை பிரச்சினை உள்ள பலர், மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் ஒரு வாரத்தில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தவில்லை. இந்த மருந்து எடுத்துக்கொண்டவர்களில் 25 சத வீதம் பேர் பாலுறவு விருப்பம் அதிகரித்ததாகவும் கூறியுள்ளனர்.

‘உல்லாசத்துக்கான’ இந்த மாத்திரை குறித்த வாத, பிரதிவாதங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் மறுபுறம் இதன் விற்பனையும் கூடிக்கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News