செய்திகள்
பொன்னணியாறு அணையின் எழில்மிகு தோற்றம்

8 ஆண்டுகளாக பாசனத்துக்கு தண்ணீர் தராத பொன்னணியாறு அணை

Published On 2020-10-24 05:51 GMT   |   Update On 2020-10-24 05:51 GMT
வையம்பட்டி அருகே உள்ள பொன்னணியாறு அணைக்கு காவிரி நீரை கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
வையம்பட்டி:

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே அமைந்துள்ளது பொன்னணியாறு அணை. 51 அடி உயரமும், 2 மதகுகளையும் கொண்ட அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி கரூர் மாவட்டத்திலும், பாசன வசதி வையம்பட்டி ஒன்றியத்திலும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,100 ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது.

ஆனால் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அணையில் போதிய நீர் இன்றி அணை திறக்கப்படவில்லை. இதனால் அணையை நம்பி இருந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, விவசாய நிலம் இருந்தும் வெளியில் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே அணையில் அதிக அளவில் சேறும் சகதியுமாக இருப்பதால் நீர்ப்பிடிப்பு பகுதி குறைந்து வருகிறது. தற்போது அணையில் நீர் இல்லாத சூழலில் அணை இருந்தும் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு தற்போது பல்வேறு நதிநீர் இணைப்பு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தப்பட உள்ள சூழலில் பொன்னணியாறு அணைக்கும் நீரை கொண்டு வர காவிரி-பொன்னணியாறு-கண்ணூத்து இணைப்பு திட்டத்தை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் ஒரு குழுவாக செயல்பட்டு மத்திய அரசின் சமக்ரா சிஷா திட்டத்தின் கீழ் பொன்னணியாறு அணைக்கும், கண்ணூத்து அணைக்கும் காவிரியில் இருந்து நீரை கொண்டு வருவது தொடர்பாக செயல்திட்டத்தை உருவாக்கி அதை பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைத்திருந்தனர். இதுகுறித்து முடிவு செய்திட பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி மணப்பாறை எம்.எல்.ஏ. சந்திரசேகர் மாயனூரில் இருந்து பொன்னணியாறு அணை 45 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருப்பதால் காவிரி நீரை பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு கொண்டு வரும் வகையில் திட்டத்தை செயல்படுத்தி மணப்பாறை சட்டமன்ற தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே கடுமையான வறட்சிப்பகுதியாக உள்ள மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு சொல்லும்படியான நீர் ஆதாரம் என்றால் அது பொன்னணியாறு அணையும், கண்ணூத்து அணையும் மட்டும் தான். ஆனால் அந்த அணைகளில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நிலத்தடி நீர்மட்டம் என்பது கானல் நீராகிக் கொண்டிருக்கிறது.

ஆகவே மக்களின் நலனை காத்திடும் வகையில் பல்வேறு வகையான நதிநீர் திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழக அரசு மணப்பாறை சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், மாயனூரில் இருந்து பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு காவிரி நீரை கொண்டு வரும் வகையில் ஒரு திட்டத்தை அறிவித்து செயல்படுத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News