செய்திகள்
அரசுக்கு எதிரான போராட்டம்

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

Published On 2019-10-04 13:24 GMT   |   Update On 2019-10-04 13:24 GMT
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
பாக்தாத்:

ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதற்கிடையே, தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. பாக்தாத்தில் உள்ள வரலாற்றுச் சின்னமான தரீர் சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்றனர். ஆனால் அதை மீறியும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறியதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 423 பாதுகாப்பு படையினர்  உள்பட 1,518 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதையடுத்து, பாக்தாத் நகரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பாக்தாத் முழுவதும் பிரதமர் அப்துல் மஹ்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News