செய்திகள்
தேமுதிகவினர் போராட்டம்

மழைக்கு சுங்கச்சாவடியில் ஒதுங்கிய தேமுதிகவினர் கைது -மதுரை அருகே பரபரப்பு

Published On 2021-01-03 09:15 GMT   |   Update On 2021-01-03 09:15 GMT
மதுரை அருகே மழைக்காக சுங்கச்சாவடியில் ஒதுங்கிய தேமுதிகவினரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை:

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262வது பிறந்தநாளை முன்னிட்டு, தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ் தலைமையில் கயத்தாறு பகுதியில் இன்று மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக வருகை தரும் சுதீஷை வரவேற்பதற்காக தேனி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட ஏராளமானோர் மதுரை அருகில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரத்தில் காத்திருந்தனர்.

அப்போது அப்பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் சாலையோரத்தில் நின்றிருந்த தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர், மழைக்கு ஒதுங்குவதற்காக சுங்கச்சாவடியில் பணம் வசூலிக்கும் பகுதியின் அருகே சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், திடீரென மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலரை கைது செய்து தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றினர். சுங்கச்சாவடியை முற்றுகையிடப் போவதாக நினைத்த போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தேமுதிகவினர் 200க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் திருமங்கலம் டிஎஸ்பி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்டார். இதனால் தேமுதிகவினர் போராட்டத்தை கைவிட்டனர். 

அதன்பின்னர் அந்த பகுதிக்கு வந்த சுதீஷ்-க்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News