செய்திகள்
வைகோ

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - வைகோ பேச்சு

Published On 2021-03-21 09:05 GMT   |   Update On 2021-03-21 09:05 GMT
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
வி.கைகாட்டி:

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, அரியலூரை அடுத்த வி.கைகாட்டியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

கனிம சுரங்கங்கள் நிறைந்த அரியலூர் மாவட்டத்தில் தினமும் இயக்கப்படும் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை சந்திக்கும் மக்களுக்காகவும், நிலத்தை சிமெண்டு ஆலைகளுக்கு கொடுத்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடும் மக்களுக்காகவும் நீதிமன்றத்தில் வாதாடி வருபவர்தான் வேட்பாளர் சின்னப்பா. அவர் வெற்றி பெற்றால் உங்களுக்கு உரிய தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவார்.

தற்போது நடைபெற்று வருவது ஊழல் ஆட்சி. முதல்-அமைச்சர் ரூ.6 ஆயிரம் கோடிக்கு தனது உறவினர்களுக்கு சாலை ஒப்பந்தங்களை கொடுத்துள்ளார் என்ற பட்டியலையும், தனது உறவினர்கள் பெயரில் ரூ.200 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளார் என்ற பட்டியலையும் ஸ்டாலின், கவர்னரிடம் கொடுத்துள்ளார். அதேபோல், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வருமானத்துக்கு மீறிய சொத்துக்களை ஊழல் செய்து சம்பாதித்துள்ளனர் என்ற பட்டியலையும் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வது மோடிக்கு பிடிக்கவில்லை. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். அதனை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்தார்.

‘நீட்’ தேர்வை கொண்டு வந்ததால்தான் இதே மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா உயிரிழந்தார். தமிழகத்துக்கு ‘நீட்’ இல்லை என ஒரு பொய்யான தகவலை பரப்பி, நம்பிக்கை மோசடி செய்தவர் பழனிசாமி. கிராம சபை கூட்டத்தை அரசு நடத்தாததால் ஸ்டாலின் மக்கள் சபை கூட்டத்தை நடத்தினார். திருச்சியில் ஒன்றிணைவோம் வா என கூட்டத்தை நடத்தி, 7 வாக்குறுதிகளை வழங்கினார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 5 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 90 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கான உரிய நடவடிக்கைகளை ஆளும் கட்சி இதுவரை எடுக்கவில்லை. ஊழல் செய்யும் அ.தி.மு.க. அரசை வெளியேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல் அரியலூரில் அவர் பேசுகையில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கல்லக்குடி என்று பெயர் மாற்றம் செய்யக்கோரி தண்டவாளத்தில் தலை வைத்து ெரயில் மறியல் போராட்டம் நடந்து. அதில் பங்கேற்ற கருணாநிதி தனது அரசியல் வாழ்வில் முதன் முதலாக அரியலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தமிழுக்காக திருச்சி ெரயில் நிலைய சந்திப்பில் கீழப்பழுவூரை சேர்ந்த சின்னசாமி உயிரை மாய்த்துக் கொண்டான். இதுபோன்று பல அரசியல் நிகழ்வுகளை கண்டது இந்த மாவட்டம். தற்போது இந்த தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளித்து தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்திடவும், ஸ்டாலின் முதல்-அமைச்சராகவும் அரியலூர் மக்கள் ஆதரவு தர வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் விக்கிரமங்கலம், சுண்டக்குடி, ஏலாக்குறிச்சி, வெங்கனூர் ஆகிய இடங்களிலும் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News