செய்திகள்
பெலாரஸ் போராட்டம்

26 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிபர் பதவி விலகக்கோரி பெலாரசில் ஆயிரக்கணக்கானோர் தொடர் போராட்டம்

Published On 2020-08-23 21:20 GMT   |   Update On 2020-08-23 21:20 GMT
பெலாரஸ் நாட்டில் 26 ஆண்டுகளாக அதிபர் பதவியில் உள்ள லூகாஷென்கோ பதவி விலகக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்ஸ்க்:

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் 
நடைபெற்றது. 

அந்த தேர்தலில் அலெக்சாண்டர் லூகாஷென்கோ வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.

மேலும், அலெக்சாண்டர் பதவி விலகவேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அதிபர் பதவி விலகக்கோரி தங்கள் கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் எதிர்கட்சி தலைவர் ஸ்வியாட்லானா பெலாரசின் அண்டை நாடான லிதுவேனியாவுக்கு சென்றுவிட்டார். அங்கிருந்தவாறு அவர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார். மேலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து தங்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் எனவும் அவர் ஊக்கமளித்து வருகிறார்.

ஆனால் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்த அதிபர் அலெக்சாண்டர் மறுதேர்தல் நடத்தப்படாது எனவும் தான் பதவி விலக்கப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க அலெக்சாண்டர் மீண்டும் அதிபராக அறிவிக்கப்பட்டதற்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்ற தேர்தலின் முடிவுகளை
நிராகரிப்பதாகவும் தெரிவித்தது.

ரஷியா மற்றும் ஐரோப்பாவின் மற்றநாடுகளை இணைக்கும் நாடாக இருப்பதால் பெலாரஸ் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக கருதப்படுகிறது. மக்கள் போராட்டத்தால் எதிர்கட்சிகள் நேட்டோ படைகளை நாடி அவர்கள் பெலாரஸ் மீது படையெடுத்து விடுவார்கள் என அதிபர் அலெக்சாண்டர் கருதுகிறார். ஆனால் இந்த கருத்தை நேட்டோ மறுத்துள்ளது.

ஆனாலும், அதிபர் அலெக்சாண்டர் ரஷிய அதிபர் புதினின் உதவியை நாடியுள்ளார். பெலாரசுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என ரஷியா உறுதியளித்துள்ளது. 

இதனால் ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் பெலாரசை அடிப்படையாக கொண்டு மீண்டும் தொடங்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெலாராஸ் நாட்டில் நேற்றும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைநகர் மின்ஸ்கில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அதிபர் அலெக்சாண்டருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

எதிர்கட்சிகள் ஆதரவு ஊடகங்கள் இந்த போராட்டத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர் என தெரிவித்துள்ளது. ஆனால் ஆளும் அரசு ஊடங்கள் இந்த போராட்டத்தில் 20 ஆயிரம்  பேர் மட்டுமே பங்கேற்றதாக தெரிவித்துள்ளது.

போராட்டங்கள் நாட்டின் அனைத்து பகுதியிலும் நடைபெற்று வருவதால் அதிபர் அலெக்சாண்டரின் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போராட்டங்கள் வெளிநாட்டு சக்திகளினால் நடத்தப்படுவதாக அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News