செய்திகள்
கைது

ஜோதிடராக நடித்து நகைகளை திருடிய கல்லூரி ஊழியர் கைது

Published On 2021-06-09 09:12 GMT   |   Update On 2021-06-09 09:12 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி ஜோதிடராக நடித்து நகைகளை திருடிய கல்லூரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி பேச்சியம்மாள்.

இவர்களது குடும்பத்தில் கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதை அறிந்த கோவில்பட்டி முத்து நகரை சேர்ந்த முத்து ராமலிங்கம் (வயது44) அவர்களிடம் இருந்து பணம் பறிக்க திட்டம் தீட்டினார்.

நெல்லையில் தனியார் கல்லூரி ஒன்றில் ஊழியராக வேலை பார்க்கும் முத்து ராமலிங்கம், அய்யனார் குடும்பத்தினரிடம் தன்னை ஜோசியர் போல அடையாளம் படுத்திக்கொண்டார். அவர்களது வீட்டிற்கு சென்று தங்க நகையை வைத்து பூஜை செய்து பரிகாரம் செய்தால் குடும்ப பிரச்சனை தீர்ந்து விடும் என கூறி உள்ளார்.

அவரது பேச்சை நம்பிய பேச்சியம்மாள் தன்னிடம் இருந்த 2½ பவுன் தங்க நகை மற்றும் அவரது சகோதரர் காசிராஜனின் 4½ பவுன் தங்க நகையை முத்துராமலிங்கத்திடம் கொடுத்துள்ளார். கடந்த மே மாதம் 7-ந்தேதி இரவு பேச்சியம்மாளின் வீட்டில் இந்த பூஜை நடந்துள்ளது.

பின்னர் பேச்சியம்மாளின் குடும்பத்தினரை அந்த அறையில் இருந்து வெளியேற சொன்ன முத்துராமலிங்கம் கதவை பூட்டிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவர், பூஜை அறையில் 2 கூஜாவில் நகைகள் வைத்துள்ளதாகவும், 40 நாட்கள் கழித்து தான் கூஜாவை திறக்க வேண்டும் எனவும் கூறிவிட்டு சென்று விட்டார்.

இதுகுறித்து பேச்சியம்மாள் தனது அண்டை வீட்டில் வசிக்கும் மாரியம்மாளிடம் கூறினார். உடனே அவரும் முத்துராமலிங்கத்தின் ஜோதிடத்தை நம்பி கடந்த 1-ந்தேதி ½ பவுன் நகையை வைத்து பரிகாரம் செய்துள்ளார். அவரிடமும், பேச்சியம்மாளிடம் சொன்ன அதே முறையில் கூஜாவை திறக்க வேண்டாம் என கூறி நகையை முத்துராமலிங்கம் திருடி சென்று விட்டார்.

இந்நிலையில் முத்துராமலிங்கம், பேச்சியம்மாளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு மீண்டும் யாருக்காவது பரிகாரம் செய்ய வேண்டுமா? எனக் கேட்டார்.

அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த பேச்சியம்மாள் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த கூஜாவை திறந்து பார்த்தார். அதில் தங்க நகை ஏதும் இல்லை.

அதிர்ச்சியடைந்த பேச்சியம்மாள், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். அவர் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிடராக நடித்து நூதன முறையில் நகைகளை மோசடி செய்த முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். 

Tags:    

Similar News