ஆன்மிகம்
அய்யா வைகுண்டர்

வைகுண்டசாமி அவதார தினம்: திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாகன பேரணி இன்று நடக்கிறது

Published On 2021-03-03 02:34 GMT   |   Update On 2021-03-03 02:34 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமியின் 189-வது அவதார தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பவனி இன்று நடக்கிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஜெயந்தி நாளான மாசி 20-ந் தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய நாள் ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் வாகன பவனி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பவனி நடைபெறவில்லை. திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியில் பணிவிடைகள் மட்டும் நடந்தது.

ஆனால் திருச்செந்தூரில் இருந்து புறப்படும் வாகன பவனி காலை 9 மணிக்கு அய்யா வைகுண்டசாமி விஞ்சை பெற்ற செந்தூர் பதியில் இருந்து புறப்படுகிறது. இந்த பவனிக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்குகிறார். கிருஷ்ணராஜ் முன்னிலை வகிக்கிறார். வாகன பேரணி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, உடன்குடி, செட்டிகுளம், ஆரல்வாய்மொழி, அம்பலவாணபுரம் வழியாக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லையில் உள்ள நிழல்தாங்கல்களில் இருந்து ஊர்வலமாக வரும் அய்யாவழி பக்தர்கள் இன்று இரவு நாகராஜா கோவில் திடலை வந்தடைகின்றனர்.

இரவு நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் மாசி மாநாடு நடக்கிறது.

வைகுண்ட சாமியின் அவதார தினமான மார்ச் 4-ம் தேதி நாளை காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து ஊர்வலம் புறப்படுகிறது. அகிலத்திரட்டை தாங்கிய வாகனமும் முன் செல்ல தொடர்ந்து முத்துக்குடைகளும் மேளதாளங்களுடன் ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்குகிறார்.

ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கொரோனா தொற்றின் காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு, சுகாதார முறைகளை கடைபிடித்து ஊர்வலத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News