செய்திகள்
வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே

தமிழகம் மற்றும் சீனா இடையே தொடர்பை ஏற்படுத்த பிரதமர் மோடி பரிந்துரை

Published On 2019-10-12 11:09 GMT   |   Update On 2019-10-12 11:09 GMT
தமிழகம் மற்றும் சீனா இடையே தொடர்பை ஏற்படுத்த பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் இன்றுடன் நிறைவடைந்தது. 

இதையடுத்து, இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான முறைசாரா சந்திப்பில் இரு தலைவர்களும் சுமார் 6 மணி நேரம் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு நாட்டு மக்களுக்கிடையே உறவு முறையை மேம்படுத்த தேவையான முயற்சிகள் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தியா மற்றும் சீனா இடையே வணிகம், முதலீடு போன்ற துறைகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாட்டுகளின் நிதி மந்திரிகள் விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.



இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை வரும் பக்தர்களுக்கு தேவையான வசிதிகளை மேம்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். மேலும், தமிழகம் மற்றும் சீனாவின் பியூஜியான் மாகாணம் தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் எடுத்துரைத்தார். 

இந்த சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படவில்லை. மேலும், உலகில் அதிகரித்துவரும் பயங்கரவாதத்தை முறியடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள இரு நாட்டு தலைவர்களும் சம்பதம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க சீனாவுக்கு வருமாறு சீன அதிபர்  அழைப்பு விடுத்தார். சீன அதிபரின் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுகொண்டுள்ளார். சீனாவில் நடைபெற உள்ள சந்திப்புக்கான தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News