தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு போட்டியில் அடக்க முயன்ற வீரர்களை காளை முட்டி தூக்கிய காட்சி.

பொட்டிரெட்டிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் வீரர்களை பதம் பார்த்த காளைகள்

Published On 2022-01-29 09:27 GMT   |   Update On 2022-01-29 09:27 GMT
பொட்டிரெட்டிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சில காளைகள் தொட்டு பார் உன்னை விடமாட்டேன் என களத்தில் ஆக்ரோ‌ஷமாக நின்றது. இதைகண்டு வீரர்கள் அஞ்சி தடுப்பு கம்பிகள் மீது ஏறி நின்றனர்.
எருமப்பட்டி:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக நாமக்கல், எருமப்பட்டி, பொட்டி ரெட்டிப்பட்டி, சேந்தமங்கலம், குமாரபாளையம், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம், மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், திருச்சி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், திருப்பூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் காளைகளை உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவை வைத்திருந்த உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள், பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். உரிய சான்றிதழ்கள் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு வைத்து ஆய்வு செய்து தகுதியான காளைகளை போட்டியில் பங்கேற்க டாக்டர்கள் அனுமதித்தனர். சுமார் 600 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதேபோல் ஆன்லைனின் பதிவு செய்த சான்று, தடுப்பூசி சான்று, கொரோனா தொற்று இல்லை சான்றிதழ் கொண்டு வந்த வீரர்கள் 200 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு விழாக்குழு சார்பில் சீருடை வழங்கப்பட்டது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

முன்னதாக கோட்டாட்சியர் மஞ்சுளா, பொன்னு சாமி எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ‘‘காளைகளை துன்புறுத்த மாட்டோம், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, அமைதியான முறையில் நடந்து கொள்வோம், கொரோனா தொற்று தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வழங்கிய தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவோம்’’ என வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

போட்டி தொடங்கியதும் முதலில் கோவில்மாடு வாடிவாசல் வழியாக விடப்பட்டது. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் களத்தில் சீறி பாய்ந்து ஓடியது. வீரர்கள் பாய்ந்து சென்று திமிலை பிடித்து அடக்கினார்கள். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் துள்ளி குதித்து வேகமாக ஓடியது.

ஒரு சில காளைகள் தொட்டு பார் உன்னை விடமாட்டேன் என களத்தில் ஆக்ரோ‌ஷமாக நின்றது. இதைகண்டு வீரர்கள் அஞ்சி தடுப்பு கம்பிகள் மீது ஏறி நின்றனர். பல காளைகள் களத்தை தெறிக்க விட்டன. காளைகளின் கம்பீரத்தை கண்டு, அவற்றை அடக்க அஞ்சினர். அடக்க முயன்ற வீரர்களை முட்டி தூக்கி வீசியது. இதில் வீரர்கள் பல அடி தூரத்தில் போய் விழுந்தனர். மேலும் வீரர்களை காளைகள் ஓட ஓட விரட்டிய காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது.

தலா 50 வீரர்கள் வீதம் ஷிப்ட் முறையில் களத்தில் இறங்கினர். பொதுமக்கள் கைகள் தட்டியும், சத்தம் எழுப்பியும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

அதுபோல் காளைகளுக்கும் விசில் அடித்து கரகோ‌‌ஷம் எழுப்பி வரவேற்றனர். மைதானத்திற்குள் பொதுமக்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் இரும்பு தடுப்பு பெரிய அளவில் அமைக்கப்பட்டிருந்தது. காளைகள், வீரர்களுக்கு காயங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டி மைதானத்தில் பாதுகாப்புக்காக தேங்காய் நார் பரப்பப்பட்டு இருந்தது.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கு உடனுக்குடன் குத்துவிளக்கு, டேபிள், கட்டில், மின்விசிறி, மிக்சி, பாத்திரங்கள், ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் வீரர்களால் அடக்க முடியாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அவற்றை உரிமையாளர்கள் வாங்கிச் சென்றனர்.

டி.எஸ்.பி. சுரேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் மைதானத்தை சுற்றிலும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.



Tags:    

Similar News