செய்திகள்
தற்கொலை

செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

Published On 2021-09-15 11:23 GMT   |   Update On 2021-09-15 11:23 GMT
செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

வில்லியனூர் வி.மணவெளி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா. இவர் நெல்லித்தோப்பில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் விழுப்புரம் அருகே ஆயந்தூரை சேர்ந்த ராஜா என்பவருக்கும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தன.

அடிக்கடி சுதா நடத்தையில் சந்தேக்கப்பட்டு ராஜா பிரச்சனை செய்து வந்ததால் அவரை விட்டு பிரிந்து சுதா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மகன்களை விடுதியில் சேர்த்து விட்டார்.

அதன் பிறகு 2013-ல் கொம்பாக்கத்தை சேர்ந்த பரதன் என்பவரை சுதா 2-வது திருமணம் செய்தார். இருவரது சம்மதத்துடன் மூத்த மகன் சூர்யா (19) இளையமகன் ஸ்ரீராம் தங்கள் வீட்டிலேயே வளர்த்து வந்தனர். இருவரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நடந்த விபத்தில் சூர்யாவுக்கு தலையில் அடிப்பட்டதால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் விபத்து நடந்தது முதல் அடிக்கடி கோபம் கொள்வார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சூர்யா வேலைக்கு செல்லாமல் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாய் சுதா கண்டித்தார். இதனால் மனமுடைந்த சூர்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.

உடனே சுதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சூர்யாவை தூக்கில் இருந்து மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சூர்யா அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று நள்ளிரவு சூர்யா பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது தாய் சுதா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News