ஆன்மிகம்
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

Published On 2021-03-27 06:41 GMT   |   Update On 2021-03-27 06:41 GMT
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. 1-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நண்பகல் 12 மணிக்கு பதியில் இருந்து அய்யா வழி பக்தர்கள் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு நெற்றியில் நாமம் இட்டு அய்யா அரகரா சிவசிவா என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி பால் கடலில் தீர்த்தமாட ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். பின்னர் வெள்ளியல் பாறையைச் சென்றடைந்ததும் அங்குள்ள கடலில் அய்யா வழி பக்தர்கள் தீர்த்தமாடினர். இரவு 7 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதியை சுற்றி பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

2-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) முதல் 5-ம் திருவிழா வரை இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 6 மற்றும் 7-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு சப்பர வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும், 8-ம் திருவிழாவான 2-ந் தேதி கலி வேட்டை நிகழ்ச்சியும் நடக்கிறது.

கலிவேட்டையையொட்டி அன்று இரவு 8 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று முட்டப்பதியின் வடக்கே கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

11-ம் திருவிழாவான 5-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா சப்பர வாகனத்தில் எழுந்தருளி பதியைசுற்றி பவனி வந்து விடியற்காலை வரை திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் திருவிழாவையொட்டி 11 நாட்களும் இரவு 7 மணிக்கு வாகன பணிவிடையும், அன்னதானமும் நடைபெறும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம், தர்மகர்த்தாக்கள் செல்வராஜன், ராஜபிரபு ஆகியோர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News