செய்திகள்
கேமரா பொருத்தம்

மிகுந்த கண்காணிப்பு கொண்ட நகரங்களில் டெல்லிக்கு முதலிடம்

Published On 2021-08-28 01:55 GMT   |   Update On 2021-08-28 01:55 GMT
இந்த பட்டியலில் தமிழகத்தின் தலைநகர் சென்னை 3-வது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு சதுர மைலுக்கு 610 கேமராக்கள் நிறுவப்பட்டு இருக்கின்றன.
புதுடெல்லி :

அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொது இடங்களை கண்காணிப்பதில் அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை ‘போர்ப்ஸ் இந்தியா’ ஊடகம் வெளியிட்டுள்ளது. ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட அதிகப்பட்ச கேமராக்களை அடிப்படையாக கொண்டு உலக அளவில் இந்த மிகுந்த கண்காணிப்பு நகர பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி உலக அளவில் அதிக கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ள முதல் நகரமாக இந்திய தலைநகர் டெல்லி தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் ஒரு சதுர மைலுக்கு 1,827 கேமராக்கள் உள்ளன. 2-வது இடத்தை இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் பெற்றிருக்கிறது. லண்டனில் 1138 (சதுர மைல்) கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த பட்டியலில் தமிழகத்தின் தலைநகர் சென்னை 3-வது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு சதுர மைலுக்கு 610 கேமராக்கள் நிறுவப்பட்டு இருக்கின்றன. இந்த பட்டியலில் 14-வது இடத்தில் நியூயார்க் (194 கேமராக்கள்) உள்ளது. 157 கேமராக்களுடன் மும்பை 18-வது இடத்தில் உள்ளது.

நியூயார்க், லண்டன், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களை பின்னுக்குத்தள்ளி உலக அளவில் டெல்லி முதலிடம் பிடித்திருப்பது குறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் மகிழ்ச்சியும், பெருமிதமும் தெரிவித்துள்ளார். மிகக்குறுகிய காலத்தில் இதை அடைந்த அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பாராட்டுகளையும் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News