செய்திகள்
மார்க்கெட்

நாளை ஆயுத பூஜை- நெல்லை மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்

Published On 2021-10-13 10:11 GMT   |   Update On 2021-10-13 10:11 GMT
ஆயுதபூஜையை யொட்டி வாழைத்தார்கள், ஆப்பிள், சாத்துக்குடி, கொய்யாபழம், பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை பழம் உள்ளிட்டவை விற்பனையும் அமோகமாக இருந்தது.
நெல்லை:

நவராத்திரி பண்டிகையில் முக்கியமான ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பூஜை பொருட்கள், பூக்கள், காய்கறிகள் வாங்க நெல்லை மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே இன்று பொதுமக்கள் குவிய தொடங்கினர்.

பாளை தற்காலிக மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் திரண்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் டவுன் மார்க்கெட், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் காய்கறி மற்றும் பூஜை பொருட்களை வாங்க ஏராளமானோர் திரண்டனர்.

தொடர் மழை காரணமாக பூக்கள் அழுகி வரத்து குறைந்து காணப்பட்டதாலும், பண்டிகையையொட்டி விற்பனை அதிகரித்ததாலும் இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

குறிப்பாக சாமந்தி பூ கிலோ ரூ.170 வரையும், பன்னீர் ரோஜா ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.20 வரை விற்கப்பட்ட ரோஜா இன்று பலமடங்கு அதிகரித்து ரூ.100 வரை விற்கப்பட்டது. எனினும் மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். சந்திப்பு பூ மார்க்கெட்டில் பிற்பகலிலேயே பெருவாரியான பூக்கள் விற்று தீர்ந்தன.

இதே போல் பொரி, கடலை, அவல் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக சாலையோரத்தில் தற்காலிக கடைகள் ஏராளமானவை அமைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் அங்கு சென்று பொருட்களை வாங்கி சென்றனர்.

மேலும் ஆயுதபூஜையை யொட்டி வாழைத்தார்கள், ஆப்பிள், சாத்துக்குடி, கொய்யாபழம், பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை பழம் உள்ளிட்டவை விற்பனையும் அமோகமாக இருந்தது.

அதிகாலை முதலே சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் மார்க்கெட்டுகளில் குவிந்த வண்ணம் இருந்தனர். ஆயுத பூஜை விற்பனையையொட்டி ஏராளமானோர் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் திரண்டதால் மார்க்கெட்டுகள் களை கட்டி காணப்பட்டது.

இதனால் டவுன், வண்ணார்பேட்டை, தச்ச நல்லூர், பாளை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இதே போல் அம்பை, களக்காடு, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் திரண்டு பொருட்களை வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News