ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால உற்சவம் நாளை தொடங்குகிறது

Published On 2021-01-04 09:07 GMT   |   Update On 2021-01-04 09:07 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால உற்சவம் கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்ராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலம் சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்ராயண புண்ணியகால உற்சவம், தட்சணாயண புண்ணிய கால உற்சவத்தின் போது சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும்.

இந்த ஆண்டிற்கான உத்ராயண புண்ணியகால உற்சவம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகில் எழுந்தருள காலை 7 மணியில் இருந்து 8.35 மணிக்குள் கொடியேற்றப்பட உள்ளது.

இந்த விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். 10 நாட்களும் காலை மற்றும் இரவு விநாயகர், சந்திரசேகரர் தனித்தனி வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சாமி உலாவை மாட வீதியில் நடத்தலாமா அல்லது கார்த்திகை தீபத் திருவிழாவை போன்று கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடத்தலாமா என்று கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆருத்ரா தரிசனத்தை போன்று சாமி உலா மாட வீதியில் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News