செய்திகள்
கடத்தப்பட்ட குழந்தையுடன் ஜோசப் ஜாண்

களியக்காவிளையில் மீட்கப்பட்ட சிறுமி பெங்களூரு போலீசில் ஒப்படைப்பு

Published On 2020-10-01 08:25 GMT   |   Update On 2020-10-01 08:25 GMT
களியக்காவிளையில் மீட்கப்பட்ட சிறுமியை பெங்களூரு போலீசாரிடம் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஒப்படைத்தார். அதன்பிறகு பெங்களூரு போலீசார், சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் களியக்காவிளை பஸ் நிலைய பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 குழந்தைகளுடன் ஆணும், பெண்ணும் நின்றனர். அவர்கள் வசம் இருந்த சிறுமி விடாமல் அழுதபடி இருந்தது. அந்த சிறுமியின் அழுகையை நிறுத்த எவ்வளவோ முயன்றும் அவர்களால் முடியவில்லை.

சிறுமி விடாமல் அழுது கொண்டிருந்ததை பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து சந்தேகம் அடைந்தனர். அவர்கள் அந்த சிறுமியை வைத்திருந்த ஆண் மற்றும் பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது தாங்கள் இருவரும் கணவன்- மனைவி என்றும், 2 குழந்தைகளும் தங்களுடைய குழந்தைகள் எனவும் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் தீரவில்லை. இதனால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுமியை ஐஸ்கிரீம் கொடுத்து பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டா கடை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஜாண்(வயது54). இவரது மனைவி சிந்து. கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிந்து கணவரை பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து ஜோசப் ஜாணுக்கு அவரது தோழியான எஸ்தர்(44) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர்கள் இருவரும் கணவன்-மனைவி போல் சேர்ந்து வாழ்த்து வந்தனர். ஜோசப் ஜானுக்கும், அவரது முதல் மனைவிக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. 6 வயது சிறுவனான அவன், ஜோசப் ஜாண் மற்றும் எஸ்தர் பராமரிப்பில் இருந்து வந்தான்.

இந்நிலையில் எஸ்தர் மற்றும் தனது மகனுடன் ஜோசப் ஜாண் கடந்த 25 நாட்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு சென்றார். அப்போது பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் வைத்து 2½ வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து அங்கிருந்து களியக்காவிளைக்கு கடத்தி கொண்டு வந்துள்ளார்.

அந்த சிறுமியை கேரளாவிற்கு அழைத்து செல்வதற்காக களியக்காவிளை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போதுதான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.

மேற்கண்டவை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஜோசப் ஜாண் மற்றும் எஸ்தரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வசம் இருந்த சிறுமி மற்றும் சிறுவன் ஆகிய இருவரையும் நாகர்கோவிலில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சிறுமி கடத்தி வரப்பட்டது குறித்து கர்நாடக மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது உப்பர்பட் என்ற போலீஸ் நிலையத்தில் லோகிதா (2½) என்ற சிறுமி மாயமானது குறித்துஅவரது பெற்றோர் புகார் செய்திருந்தது தெரிய வந்தது.

மேலும் அந்த சிறுமியின் தாய், தனது குழந்தை மாயமானது குறித்து வெளியிட்டிருந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதில் வந்த குழந்தையின் புகைப்படத்தை வைத்து, அந்த பெண்ணின் குழந்தை தான் களியக்காவிளையில் மீட்கப்பட்ட சிறுமி என்பது உறுதி செய்யப்பட்டது.

ஆகவே மாயமான குழந்தை கிடைத்து விட்டதாக அந்த குழந்தையின் தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பெங்களூரு போலீசார் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு இன்று வந்தனர்.

குழந்தை கடத்தல் குறித்து பெங்களூரு உப்பர்பட் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதால், கைது செய்யப்பட்டுள்ள ஜோசப்ஜாண் மற்றும் எஸ்தரிடம் பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்பு மீட்கப்பட்ட சிறுமி லோகிதாவை பெங்களூரு போலீசாரிடம் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஒப்படைத்தார். அதன்பிறகு பெங்களூரு போலீசார், சிறுமியை அவரது தாயிடம் கொடுத்தனர். அப்போது சிறுமியை அவளது தாய் கண்ணீர் மல்க பெற்றுக்கொண்டார்.

சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்தை கண்டுபிடித்த களியக்காவிளை போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
Tags:    

Similar News