செய்திகள்
விஜயதாரணி, செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் சட்டசபை தலைவர் தேர்வில் தொடர்ந்து இழுபறி

Published On 2021-05-18 01:39 GMT   |   Update On 2021-05-18 01:39 GMT
தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய 2 முறை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்ற பிறகும் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.
சென்னை :

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து 25 இடங்களில் போட்டியிட்டது. இதில், காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி வாகை சூடியது.

பா.ஜ.க. உள்பட இதர கட்சிகள் தங்கள் சட்டமன்ற தலைவரை தேர்வு செய்துள்ள நிலையில், இன்று வரை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் யார் என்று தேர்வு செய்யப்படாமல் உள்ளது.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பதற்கான அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் சோனியாகாந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, சோனியாகாந்தியால் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவியதால், யாரையும் ஒருமனதாக தேர்வு செய்து அறிவிக்க முடியவில்லை.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையின் உத்தரவின் பேரில், 2 மேலிட பார்வையாளர்களாக நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் நேற்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து அறியும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான படிவம் எம்.எல்.ஏ.க்களிடம் வழங்கப்பட்டு, அவர்கள் யாரை சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்ய விரும்புகிறார்களோ, அவரின் பெயரை எழுதி தரும்படி கோரப்பட்டது. கூட்டத்தின் முடிவில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் யார் என்பதை பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பதாக இருந்தது.

ஆனால், நேற்றைய கூட்டத்திலும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் யார்? என்பது முடிவு செய்யப்படாததால் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. கருத்து கேட்பு கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எழுதி கொடுத்துள்ள விருப்பத்தின் அடிப்படையில், மேலிட பார்வையாளர்கள் அறிக்கை தயார் செய்து கட்சியின் தலைவர் சோனியாகாந்தியிடம் வழங்குவார்கள்.

அதன் அடிப்படையில், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் யார்? என்பதை காங்கிரஸ் மேலிடம் இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் யார்? என்பதில், எம்.எல்.ஏ.க்கள் விஜயதாரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், முனிரத்தினம், செல்வப்பெருந்தகை இடையே போட்டி நிலவுவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News