செய்திகள்
மரணம்

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலி

Published On 2021-01-16 08:13 GMT   |   Update On 2021-01-16 08:13 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அத்தியூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (46).விவசாயி. இவருக்கு கே.என்.பாளையம் அட்டணை என்ற கிராமத்தில் வனப்பகுதியையொட்டி 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் மரவள்ளிகிழங்கு பயிரிட்டுள்ளார்.

இதே பகுதியை சேர்ந்தவர் சடையப்பன் (50). விவசாயி. இவருக்கு 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது தோட்டத்திலும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளார்.

இவர்களது மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் இரவு நேரத்தில் காவலுக்கு சென்று வந்தனர்.

இதே போல் நேற்று இரவும் பெரியசாமி, சடையப்பன் ஆகியோர் காவலுக்கு சென்றனர். இரவு 11 மணியளவில் அவர்கள் 2 பேரும் ஒரு பரணில் படுத்து தூங்கி கொண்டுஇருந்தனர்.

அப்போது திடீரென ஒரு காட்டு யானை இவர்களது தோட்டத்துக்குள் நுழைந்தது. இதையடுத்து பெரியசாமி, சடையப்பன் ஆகியோர் பரணில் இருந்து கீழே இறங்கி வந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது யானை திடீரென ஆவேசம் அடைந்து 2 பேரையும் தாக்கியது. இதில் பெரியசாமி யானையிடம் வசமாக சிக்கி கொண்டார். அவரை யானை தாக்கி கொன்றது. காயம் அடைந்த சடையப்பன் யானையிடம் இருந்து தப்பி ஓடி வந்தார்.

அப்போது அவர் திடீரென கிழே விழுந்தார். இதில் அவருக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுப்பற்றி தெரியவந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்த சடையப்பனை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

யானை தாக்கி பலியான பெரியசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பலியான பெரியசாமிக்கு அழகம்மாள் என்ற மனைவியும், ராமர் என்ற மகனும், மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஒருமாத காலத்தில் தோட்டத்திற்கு காவலுக்கு சென்ற 2 விவசாயிகள் யானை தாக்கி பலியாகி உள்ளனர். எனவே இரவு தோட்டத்துக்கு காவலுக்கு செல்லும் விவசாயிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News