செய்திகள்
பலி

செங்கல் சூளைக்கு மண் எடுத்தபோது மண் சரிந்து வாலிபர் பலி

Published On 2020-11-12 09:18 GMT   |   Update On 2020-11-12 09:18 GMT
கும்பகோணம் அருகே செங்கல் சூளைக்கு மண் எடுத்தபோது மண் சரிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார். இதைத்தொடந்து உடலை வைத்து மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள கோடியமங்கலம் கீழஅகலகன் காலனி தெருவை சேர்ந்தவர் அய்யாபிள்ளை. இவருடைய மகன் பிரபாகரன் (வயது19). இவர் திருநீலக்குடி கீழச்சேத்தி பகுதியை சேர்ந்த மாதவன்(40) என்பவரின் செங்கல் சூளையில் நேற்று மதியம் மண் எடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது மண் சரிந்து விழுந்தது. இதில் மண்ணில் சிக்கிய பிரபாகரன் மயங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மண்ணில் இருந்து மீட்டு எஸ். புதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரபாகரன் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பிரபாகரனின் உறவினர்கள் பிரபாகரனின் உடலை எஸ். புதூர் கடைவீதியில் சாலையில் வைத்து நிவாரணம் கேட்டு மாலை 4 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம்- காரைக்கால் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இறந்த பிரபாகரன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரியும் செங்கல் சூளை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தியும் பிரபாகரன் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த திருநீலக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் செங்கல் சூளை உரிமையாளரை கைது செய்கிறோம் என கூறினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் இதை ஏற்காமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவு 7 மணி வரை மறியல் நீடித்ததால் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது மறியல் செய்தவர்களின் கூட்டத்தில் இருந்து சிலர் போலீசார் மீது கற்களை வீசினர்.

உடனே சம்பவ இடத்துக்கு ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். அப்போதும் மறியல் தொடர்ந்ததால் போலீசார் நிலைமையை கட்டுப்படுத்த மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் போலீசார் பிரபாகரன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மறியலில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News