செய்திகள்
டிகே சிவக்குமார்

கர்நாடகத்தில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த பாஜக: டி.கே.சிவக்குமார்

Published On 2020-11-23 02:25 GMT   |   Update On 2020-11-23 02:25 GMT
கர்நாடகத்தில் பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு ;

பல்லாரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒசப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு, கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நான் தயாராக உள்ளேன். தேர்தல் நேரத்தில் நிர்வாகிகள் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். இடைத்தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். நமது கட்சி ஏன் தோல்வி அடைந்தது என்று ஆலோசிக்க வேண்டாம். அதுகுறித்து நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நமது கட்சியில் தலைவர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

வருகிற தேர்தலில் இந்த பகுதியில் யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்ய மாட்டோம். நீங்களே முடிவு செய்து பெயர்களை அனுப்புங்கள். நீங்கள் கை காட்டுகிறவர்களுக்கு டிக்கெட் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு உள்ளது. ஆனால் பிற கட்சியினர் காங்கிரசில் வந்து சேருகிறார்கள். இது காங்கிரஸ் மீது அவர்களின் நம்பிக்கையை காட்டுகிறது.

மஸ்கி தொகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த பசவகவுடா துருவிஹால என்பவர் நமது கட்சியில் வந்து சேருகிறார். பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பலர் என்னை வந்து சந்தித்து, காங்கிரசில் சேர விருப்பம் தெரிவிக்கிறார்கள். கட்சியின் கொள்கை- கோட்பாடுகள் மீது தீவிரமான நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி நாட்டை 2 ஆக பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது

ஆனால் அம்பேத்கரின் விருப்பத்தின்படி நாட்டை ஒன்றுபடுத்தும் பணியை நாம் செய்வோம். அத்தகைய சக்தி காங்கிரசுக்கு மட்டுமே உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சி குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜனதா அரசு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது.

மத்திய பா.ஜனதா அரசு பெட்ரோல்-டீசல் விலையை அதிகரித்து வருகிறது. கொரோனா பெயரில் பா.ஜனதாவினர் கொள்ளையடித்து உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இந்த அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.
Tags:    

Similar News