செய்திகள்
மழை (கோப்புப்படம்)

திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் பலத்த மழை

Published On 2019-10-30 10:23 GMT   |   Update On 2019-10-30 10:23 GMT
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் திருச்சி, அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
அரியலூர்:

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. இடையே பலத்த மழையும் பெய்தது. இதனால் மத்திய பஸ் நிலையம், கண்டோன்மெண்ட் சாலை, வெஸ்ட்ரி பள்ளி சாலை, திருவானைக்காவல் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

ஏர்போர்ட் நுழைவு வாயிலில் தெப்பக்குளம் போல் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தெருக்களில் மழை நீரால் சேறும் சகதியுமாக மாறி பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் , அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நேற்று காலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஜெமீன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 65), கணேசன் (27), சின்னப்பன் (32), மீனா (55), பொன்னம்மாள் (68) ஆகியோர் ஆடு மேய்க்க சென்றனர். ஜெமீன் ஆத்தூர் அருகே உள்ள குண்டாறு ஓடை பகுதியில் 40க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. இதில் ஆடுகள் சிக்கி அடித்து செல்லப்பட்டன. ஓடை கரையின் ஒரு பகுதியில் சிக்கியவர்கள் செல்போன் மூலம் ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து தங்களை மீட்கும்படி கேட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் புகழேந்தி தலைமையிலான வீரர்கள் ஜெமீன் ஆத்தூர் குண்டாறு ஓடை பகுதிக்கு சென்று கயிறு கட்டி ஓடையின் மறு கரையில் சிக்கி தவித்த 5 பேரையும் மீட்டனர். ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கரூர், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-அரியலூர் -70, செந்துறை-52, திருமானூர்-45, ஜெயங்கொண்டம்-36.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

பாடாலூர் -27, அகரம் சிகூர்-35, லெப்பை குடிக்காடு- 40, புது வேட்டக்குடி-41, பெரம்பலூர்-58, எறையூர்- 38, கிருஷ்ணாபுரம்- 59, தழுதாழை-53, வி.களத்தூர்-45, வேப்பந்தட்டை-45.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கரூர்-10.4, அரவக்குறிச்சி-25, அணைப்பாளையம்-7, க.பரமத்தி-5, குளித்தலை -10, தோகைமலை -6, கிருஷ்ணராயபுரம்-7.8, மாயனூர்-7, பஞ்சப்பட்டி-30, கடவூர்-42, பாலவிடுதி-42.1, வையம்பட்டி-25.
Tags:    

Similar News