உள்ளூர் செய்திகள்
கைது

வியாபாரியை வெட்டி கொல்ல முயற்சி- பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் அதிரடி கைது

Published On 2022-01-12 10:38 GMT   |   Update On 2022-01-12 10:38 GMT
திருக்கோவிலூர் அருகே வியாபாரியை வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவர் அதே ஊரில் சவுண்ட் சர்வீஸ் மற்றும் வாடகை பாத்திர கடை நடத்தி வருகிறார்.

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அன்பு என்கிற விஜய் (22), வெங்கடேசன் (19) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று விஜயகுமார் மாயனூர் ரெயில்வே பாதையில் நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு வந்த விஜய், அவரது நண்பர் வெங்கடேசன் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 3 பேர் ஒன்று சேர்ந்து விஜயகுமாரை வழிமறித்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் அலறி துடித்தவாறு விஜயகுமார் கீழே சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய விஜயகுமாரை உடனே அங்கு உள்ளவர்கள் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலை மோசமானது. பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விஜயகுமார் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த தகவல் தேவனூர் கிராமத்தில் காட்டு தீ போல் பரவியது. விஜயகுமாரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் தேவனூர் கூட்டு ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினர்.

அதனை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த சம்பவத்தில் 9 பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. முதற்கட்டமாக பழனி, அஞ்சலை, சுருளி மற்றும் தேவிகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அன்பு மற்றும் வெங்கடேசன் நேற்று மாயனூர் ரெயில்வே பாதையில் கக்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அய்யப்பன், காடகனூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித், அசோகன் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News