உள்ளூர் செய்திகள்
சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டி பலியான மாட்டின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம்

ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரும்போது காளை முட்டியதில் உரிமையாளர் பலி

Published On 2022-01-15 06:32 GMT   |   Update On 2022-01-15 09:24 GMT
ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரும்போது காளை முட்டியதில் உரிமையாளர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த பெரிய சூரியூரில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. 400 காளைகள், 300 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

காளைகள் வரிசை எண் படி வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. இதில் 112 எண் கொண்ட காளையை அதன் உரிமையாளர் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை சாலையை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (வயது 29) என்பவர் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடுவதற்காக அழைத்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த காளை உரிமையாளரான மீனாட்சி சுந்தரத்தை மார்பில் முட்டியது. இதில் குடல் சரிந்து மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அதிக ரத்தம் சென்றதால் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர் ராஜா என்பவர் மீது பின்வாசலில் காளை பாய்ந்தது. அவரது உயிர் நாடியில் மாடு பாய்ந்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆம்புலன்சு வாகனம் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் 10 பேர் காளைகள் முட்டியதில் காயம் அடைந்து முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News