ஆன்மிகம்
வித்யாரம்பம்

புதியதாக ஒன்றை கற்றுக்கொள்வதற்கு உகந்த தினம் விஜயதசமி

Published On 2021-10-15 03:52 GMT   |   Update On 2021-10-15 09:05 GMT
இந்த நாளில் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்’ எனப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் கல்வி வளம் பெருகும் என்பது ஐதீகம்.
மகிஷன் என்னும் அசுரன், பிரம்மதேவரை நோக்கி தவம் இருந்தான். அவன் முன் தோன்றிய பிரம்மனிடம், ‘அழிவில்லாத வரம் வேண்டும்’ என்று கேட்டான். ஆனால் அதைத் தர முடியாது என்று பிரம்மன் மறுத்ததால், ‘பெண்களால் மட்டுமே அழிவு வர வேண்டும்’ என்று வரம் கேட்டான். அந்த வரத்தை அவனுக்கு அளித்தார், பிரம்மன்.

பெண் மென்மையானவர்கள். அவர்களால் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற எண்ணத்தில், அப்படி ஒரு வரத்தை மகிஷன் கேட்டுப் பெற்றிருந்தான். அந்த வரத்தின் ஆணவத்தால், முனிவர்களையும், தேவர்களையும் துன்புறுத்தினான். இதனால் அவர்கள் அனைவரும் பராசக்தியை வேண்டினர். பெண்ணால்தான் மகிஷனுக்கு மரணம் என்பதால், தேவர்கள் அனைவரும் தங்களை காத்தருளும்படி பாராசக்தியை துதித்தனர். இதையடுத்து மகிஷனுடன் போரிட ஆயத்தமானாள், பராசக்தி.

அவளுக்கு, சிவபெருமான் சூலத்தை வழங்கினார். விஷ்ணு பகவான் சக்கரத்தை கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள். மகிஷனுடனான போர் 9 நாட்கள் தொடர்ந்தது. 10-ம் நாளில் அவனை அழித்தார், பராசக்தி. இந்த நாளே ‘விஜயதசமி’ என்று கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்கு பின்வரும் நாளை ‘விஜயதசமி’ என்ற பெயரில் கொண்டாடுகிறோம். இது வெற்றியைத் தரும் நாளாக கருதப்படுகிறது. எனவே எந்த ஒரு காரியத்தையும் இந்த நாளில் தொடங்கினால், அது வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி என புதியதாக ஒன்றை கற்றுக்கொள்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும் இந்த தினம் ஏற்றதாக இருப்பதாக நம்பிக்கை.

இந்த நாளில் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்’ எனப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் கல்வி வளம் பெருகும் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News