செய்திகள்
மீன்கள் செத்து மிதக்கும் காட்சி.

மேட்டூர் அணை உபரிநீர் போக்கியில் செத்து மிதக்கும் மீன்கள்- அதிகாரிகள் விசாரணை

Published On 2019-12-05 10:13 GMT   |   Update On 2019-12-05 10:13 GMT
மேட்டூர் அணை உபரிநீர் போக்கி கால்வாயில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல் உள்ளதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேட்டூர்:

மேட்டூர் அணை நிரம்பியதும், கூடுதலாக வரும் 25 ஆயிரம் கன அடி வரையிலான தண்ணீரை நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படும். மீதமுள்ள தண்ணீர் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்படும். நடப்பாண்டில், மேட்டூர் அணை அடுத்தடுத்து 4 முறை நிரம்பியதை அடுத்து, உபரிநீர், 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டது. தற்போது உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உபரிநீர் போக்கி கால்வாயில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல உள்ளது.

இந்தப் பகுதியில் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதில் ஏராளமான சிறிய வகை மீன்கள் செத்து மிதக்கின்றன. அடிக்கடி உபரிநீர் கால்வாயில் மீன்கள் செத்து மிதப்பதால், அப்பகுதியில் உள்ள தண்ணீரை ஆய்வுக்குட்படுத்தி மீன்கள் சாவுக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

நீரின் நிறம் மாறியதால், தங்கமாபுரிபட்டினம், சேலம் கேம்ப், தொட்டில்பட்டி பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது பற்றி மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அணை நீர்பரப்பு பகுதியில் தேங்கி, துர்நாற்றம் வீசிய பாசி படலத்தை அழிக்க, மருந்துகள் தெளிக்கப்பட்டன. அதேபோல், 16 கண் மதகு குட்டைகளிலும், பாசி படலத்தை அழிக்க மருந்து தெளிக்க வேண்டும் என கரையோரம் வசிக்கும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News