செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பாதிப்பு எதிரொலி- பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Published On 2021-09-18 05:54 GMT   |   Update On 2021-09-18 05:54 GMT
மதுரையில் தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 2 பேருக்கு மட்டும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடங்கள் கடந்த 1-ந் தேதி திறக்கப்பட்டன.

இதையடுத்து மாணவ-மாணவிகள் நேரடியாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் மதுரை மாநகரில் பள்ளிக்கூடம் சென்று திரும்பிய 6 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகரில் 6 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகள் படித்த பள்ளிக்கூடங்களில் தீவிர நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

இது தவிர நோய் பாதித்த மாணவ-மாணவிகளுடன் நெருக்கமாக பழகி வந்த தோழிகள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்த பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

அடுத்தபடியாக மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிக்கூடங்களில் முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி மூலம் கைகளை கழுவுவது, சமூக இடைவெளியுடன் அமர்வது, வகுப்பறைகளை கிருமி நாசினி மூலம் அடிக்கடி சுத்தப்படுத்துவது ஆகியவை உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக மதுரை மாவட்ட தலைமை பள்ளிக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறியதாவது:-

மதுரையை பொருத்தவரை தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 2 பேருக்கு மட்டும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதாக தகவல் வந்து உள்ளது. இதில் ஒருவரின் தந்தைக்கு நோய் பாதிப்பு இருந்தது. அது மகளுக்கும் பரவி உள்ளது. மதுரையில் 2 பேர் தவிர மற்ற மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு பற்றி எனக்கு இதுவரை தகவல் இல்லை.

மதுரை மாவட்டத்தில் பிளஸ்-2 அசல் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. இதனைப் பெற்றுக் கொள்வதற்காக பள்ளிக்கூடத்திற்கு வரும் பெற்றோர் மற்றும் மாணவ-மாணவியர் அனைவரும் முகக்கவசம் அணிந்து நோய் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News