செய்திகள்

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- பன்றி ஆண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்

Published On 2019-02-05 09:31 GMT   |   Update On 2019-02-05 10:23 GMT
சீன புத்தாண்டான பன்றி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சீன மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். #China #Lunarnewyear
பெய்ஜிங்:

சீனாவில் பாரம்பரிய லூனார் நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் அடிப்படையில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. சீனாவில் இந்த புத்தாண்டு கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். அந்த வகையில் இந்த ஆண்டு, பன்றி ஆண்டாக அமைந்துள்ளது. சீன நாட்காட்டியில் உள்ள 12 விலங்கு ராசிகளில் பன்றியும் ஒன்று. இதனை நம்பிக்கையின் சின்னமாக சீனர்கள் கருதுகின்றனர்.

பன்றி ஆண்டு இன்று தொடங்கிய நிலையில், சீன மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சீன மக்கள் கோலாகலமாக கொண்டாட்டத்துடன் பன்றி ஆண்டை வரவேற்றனர்.



பாங்காக்கில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் மனிதருக்கு பன்றி வேஷம் போடப்பட்டு, உண்டியல் போன்ற அமைப்பில் காட்சிப்படுத்தினர். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த புத்தாண்டினை வசந்தகால விழா எனும் பெயரிலும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா பகுதியில் கடலுக்கடியில் ஒருவர் நீந்தி, குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் வாழ்த்து கூறினார். மேலும் பாலியில் பாரம்பரிய லியோங் நடனம் நடைபெற்றது. இதேபோன்று ஹாங் காங் பகுதியில் மிகப்பெரிய பன்றி சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஓபரா ஹவுஸ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிவப்புநிற வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.



பெய்ஜிங்கில் உள்ள கோவிலில் கலாச்சார முறைப்படி ஆடை அணிந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதற்கென பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் சீன மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



சீனாவின் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்ல பல மணி நேரம் ஆனபோதும், மக்கள் காத்திருந்து செல்கின்றனர்.  நேற்றிரவு முதலே வாணவேடிக்கைகள், வண்ண விளக்குகள், புத்தாடைகள், பாரம்பரிய உணவுகள் என சீனாவின் அனைத்து இடங்களும் களைகட்டி காணப்படுகிறது. #China #Lunarnewyear 
Tags:    

Similar News