செய்திகள்
சஜித் பிரேமதாசா

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு - தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

Published On 2019-11-07 13:41 GMT   |   Update On 2019-11-07 13:41 GMT
இலங்கையின் பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக இன்று அறிவித்துள்ளது.
கொழும்பு :

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் சுமார் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
 
ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இலங்கை தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்  பிரேமதாசாவுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தவறான முடிவு பேரழிவுக்கு வழிவகுக்கலாம். எனவே நன்கு ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்து பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை பெறுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News