செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை 10-ந்தேதி அறிவிப்போம்- தம்பிதுரை எம்.பி. பேட்டி

Published On 2019-01-06 05:48 GMT   |   Update On 2019-01-06 06:31 GMT
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை வரும் 10-ந்தேதி அறிவிப்போம் என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thiruvarurByelection
பேரளம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள வாஞ்சிநாத சுவாமி கோவிலில் தம்பிதுரை எம்.பி. தனது மனைவி, மகளுடன் வந்து இன்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திப்பதற்கு அதிமுக தயாராக இருக்கிறது. அதில் எந்த கருத்து வேறுபாடுகளும் கிடையாது. தேர்தல் வைப்பதும், தள்ளி வைப்பதும் தேர்தல் ஆணையத்தின் முடிவு.

ஆனால் இன்று என்னுடைய சொந்தக் கருத்தாக சொல்கிறேன். உங்களுக்கு நினைவிருக்கும் பென்னாகரம் இடைத்தேர்தல் வந்தபோது அப்போது திமுக ஆட்சி. அந்த சமயத்தில் ஜெயலலிதா, பொங்கல் நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது. தேர்தல் வைத்தால் சரியாக இருக்காது என்று கூறியதால் தேர்தலை தள்ளி வைத்தார்கள். இது ஒரு முன்னுதாரணம்.

தேர்தல் ஆணையம் தமிழகத்தின் நிலையை அறிந்து அதற்கேற்றாற்போல் அறிவித்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. தேர்தல் என்பது ஜனவரி மாதத்தில் நடத்துவது சரியாக இருக்காது. அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டம் கஜா புயலால் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. நிவாரண பணிகளை அரசு செய்து வருகிறது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் தேர்தலையும் நடத்தலாம் நிவாரணத்தையும் வழங்கலாம் என கூறுவது சில பிரச்சனைகளை உருவாக்கும்.

அதிமுக வேட்புமனு தாக்கல் முன்புதான் தேர்தலில் வேட்பாளரை அறிவிக்கும். தற்போது 10-ந்தேதி அதிமுக வேட்பாளரை அறிவிப்பார்கள். அதிமுக வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால்தான் 52 வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். திருவாரூரில் அதிமுக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு தம்பிதுரை எம்பி கூறினார.
Tags:    

Similar News