விளையாட்டு
ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து

ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து - தமிழக வீராங்கனைகள் 5 பேர் இந்திய அணிக்கு தேர்வு

Published On 2022-01-12 09:18 GMT   |   Update On 2022-01-12 09:18 GMT
இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இந்துமதி, சந்தியா, கார்த்திகா, சவுமியா, மாரியம்மாள் ஆகிய 5 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை:

ஆசிய கால்பந்து சம்மேளனம் (ஏ.எப்.சி.) நடத்தும் ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டி வருகிற 20-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை இந்தியாவில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை, நவி மும்பை, புனே ஆகிய 3 இடங்களில் கொரோனா பாதுகாப்பு வளையத்தின் கீழ் நடத்தப்படுகிறது.

இதில் போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, சீனா, சீன தைபே, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், மியன்மார், ஈரான் ஆகிய 12 நாடுகள் பங்கேற்கின்றன.

இவை 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. சீனா, ஈரான், சீன தைபே ஆகிய நாடுகள் அந்த பிரிவில் உள்ளன.

ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இந்துமதி, சந்தியா, கார்த்திகா, சவுமியா, மாரியம்மாள் ஆகிய 5 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

கேப்டன் அறிவிக்கப்படாத இந்த அணிக்கு ஆஷா லதா தேவி தலைமை வகிக்க வாய்ப்பு உள்ளது. வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்ட தெற்கு ஆசிய போட்டியில் 2-வது இடத்தை பிடித்த இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஷில்கிதேவி, மாரியம் மாள், சுமதி, பிரியங்கா தேவி ஆகிய 4 வீராங்கனைகள் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.

ஆசிய மகளிர் கால்பந்து போட்டியில் விளையாடும் இந்திய அணியின் விவரம் வருமாறு:-

அதிதி சவுகான், மாய்ப்பம் தேவி, சவுமியா (கோல் கீப்பர்கள்), டாலிமா சிப்பர், சுவீட்டி தேவி, லிதுராணி, ஆஷா லதா தேவி, மணீஷா பன்னா, ஷில்கி தேவி, சஞ்சு யாதவ் (பின்களம்), கமலாதேவி, அஞ்சு தமங், கார்த்திகா அங்கமுத்து, ரத்தன்பாலா தேவி, பிரியங்கா தேவி, இந்துமதி கதிரேசன் (நடுகளம்), மணீஷா கல்யாண், கிரேஸ் டாங்மாய், தியாரி, ரேணு, சுமதிகுமாரி, சந்தியா ரங்கநாதன், மாரியம்மாள் பாலமுருகன் (முன்களம்).தலைமை பயிற்சியாளர் தாமஸ் டென்னார்பி.

ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டி 1980-க்கு பிறகு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் பிபா உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று போட்டியாகும். 
Tags:    

Similar News